ரூ.100 கோடி நிலத்தை அபகரித்த விவகாரம் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கல்? கரூரில் சிபிசிஐடி முகாமிட்டு தீவிர விசாரணை

கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பு புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கரூரில் முகாமிட்டு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனார். இதனால் கைது அச்சத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த 22 ஏக்கர் நிலம் சுமார் ரூ.100 கோடி மதிப்புடையது. இந்த புகாரின் மீது கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர். இதேபோல், கரூர் மாவட்ட வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், ‘தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் எனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் எனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கரூர் நகர போலீசார் வழக்கு தொடர்பான கோப்புகள், திரட்டிய தகவல்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் கரூர் வந்தனர். தனியார் விடுதியில் தங்கியுள்ள அவர்கள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். எந்த நேரத்திலும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகி விட்டார்.

அவர் காஷ்மீர் அல்லது பஞ்சாப்பில் பதுங்கியிருக்கலாம் என கரூர் மாவட்ட அதிமுகவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் கட்சியினர் யாரும் வராததால் கரூர் மாவட்ட அதிமுக அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இந்நிலையில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (19ம்தேதி) வருகிறது.

Related posts

டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து