ரூ.100 கோடி நில அபகரிப்பு புகார்; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு 3வது முறையாக ஒத்திவைப்பு

கரூர்: கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 2021ம் ஆண்டில், கரூர் மற்றும் சென்னையில் இவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 நாட்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பிறகுதான் அதிமுகவை சேர்ந்த பிற முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த ஒரு புகாரில், கரூரை சேர்ந்த 7 பேர் போலியான சான்றிதழ் கொடுத்து தன்னை ஏமாற்றி பத்திரப்பதிவு செய்ததாக தெரிவித்திருந்தார். இந்த புகாரில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 12ம் தேதி முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 15க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், இதே பிரச்னை தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆட்கள் மிரட்டி எழுதி வாங்கியதாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் கரூர் காவல் நிலையத்தில் சார்பதிவாளர் அளித்த புகார் மீதான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி உத்தரவின்பேரில், 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் கரூரில் முகாமிட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர். தான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காஷ்மீரில் பதுங்கி உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கரூர் அருகில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அவர் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதற்கிடையே ஜூன் 15ம் தேதி விசாரணைக்கு வந்தபோது 19ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீதிபதி சண்முகசுந்தரம், 3வது முறையாக வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது