கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது

*அறுவடை தள்ளிப்போனதால் 5000 ஏக்கர் மட்டுமே சாகுபடி

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு அறுவடைப்பணி முடிவுற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த வருடம் மிகக் குறைந்த அளவே உளுந்தபயிறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் இந்த வருடம் உளுந்து மற்றும் பயரு சாகுபடி மிகவும் குறைந்துள்ளது. கொள்ளிடம் வட்டாரத்தில் மட்டும் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே உளுந்து மற்றும் பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 90 சதவீதத்திற்கும் மேல் அறுவடை பணி நிறைவுற்று ஒரு சில பகுதிகளில் மட்டும் மிகவும் குறைந்த நிலங்களில் அறுவடை பணி நடந்து கொண்டிருக்கிறது.

சென்ற வருடம் கொள்ளிடம் பகுதியில் சுமார் 10,000 ஏக்கரில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.சில இடங்களில் பின்தங்கி விதைப்பு செய்த வயல்களில் அறுவடை சற்று தள்ளிப் போய் உள்ளது. கொள்ளிடம் பகுதியில் கடந்த பருவ மழை உரிய காலத்தில் பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.ஆனால் பருவ மழை உரிய காலத்தில் பெய்யாமல் காலம் கடந்து வழக்கத்துக்கு மாறாக ஒரே நேரத்தில் அதிக மழை கொட்டி தீர்த்தது.

இதனால் சம்பா நடவு நெற் பயிர் மற்றும் நேரடி விதைப்பு பயிர் பெரிதும் பாதிக்கப்பட்டு தண்ணீரில் அழுகியது. அதனைத் தொடர்ந்து விவசாயிகள் சேதம் அடந்த பயிருக்கு பதிலாக
மறு நெற்பயிற் சாகுபடி செய்தனர். இதனால் சம்பா அறுவடை பணி தள்ளிப் போனது.

வழக்கம்போல உரிய காலத்தில் சம்பா அறுவடை பணி நடைபெறுவதற்கு முன்பாக வருடம் தோறும் பொங்கல் பண்டிகை காலங்களில் உளுந்து மற்றும் பயரு விதைப்பு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த காலகட்டத்தில் விதைப்பு செய்தால் குறிப்பிட்ட காலம் கடந்து பிறகு செடி பூ பூத்து காய் காய்க்கும் நேரம் ஆரம்பிக்கும்.அப்போது தென்றல் வீசுவதால் அதிக பூ மற்றும் காய் காய்த்து அதிக உளுந்து சாகுபடி விவசாயிகள் பெரும் வாய்ப்பு இருந்து வருவது தொடர் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த வருடம் மழை பெய்து பல இடங்களில் நெற்பயிர் பாதிக்கப்பட்டு மீண்டும் சாகுபடி செய்ததால் நெற்பயிரின் அறுவடை காலம் தள்ளிப் போனதால் விதைப்பு காலமும் தள்ளிப்போனது. இதனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி கடந்த வருடங்களைப் போல இந்த வருடம் உளுந்து மற்றும் பயரு சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கொள்ளிடம் வட்டாரத்திலேயே சுமார் 5000 ஏக்கரில் மட்டுமே உளுந்து மற்றும் பயிறு சாகுபடி செய்யப்பட்டது.

உளுந்து பயறு விதைப்பு செய்தும் எதிர்பார்த்தபடி மகசூல் கிடைக்கவில்லை. இந்த வருடம் பருவ மழை காரணத்தினால் பெரும்பாலான நிலங்களில் உளுந்து விதைப்பு செய்ய முடியவில்லை. இதனால் இந்த வருடம் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உளுந்து பயிறு சாகுபடி செய்ய முடியாமல் இழப்பை சந்தித்ததாக தெரிவித்தனர்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு