வருவாய் ஈட்டிக் கொடுக்கும் பஞ்சகவ்ய விளக்குகள்!

நாம் தினம் தினம் கடந்து செல்லும் எத்தனையோ சிறு பொருட்களில் கூட மாதம் பல்லாயிரம் வருமானம் இருப்பதை நாம் கவனிப்பதில்லை. அப்படி கோவில்கள், ஆன்மீகத் தளங்கள் என எங்கும் இந்த பஞ்சகவ்ய விளக்குகள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதன் தயாரிப்பில் கூட வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டலாம் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். இதோ விளக்கு, கோலப்பொடி, சாம்பிராணி என வீட்டிலேயே சிறுதொழிலாக ஆரம்பித்து மாதந்தோறும் ஒரு கணிசமான வருவாய் ஈட்டி வருகிறார் சோனியா. எப்படி சாத்தியம்? எங்கே தோன்றியது இந்த விளக்குகள் தயாரிக்கும் எண்ணம்? விளக்கமாக பேசினார். ‘மாதவிடாய் காலங்களில் என் வீட்டின் பூஜை அறையையோ அல்லது பூஜை பொருட்களையோ நான் தொட மாட்டேன். அப்படித்தான் மாதவிடாய் காலத்தில் ஆர்டர் எடுப்பதும் இல்லை, பேக்கிங் செய்யறதும் இல்லை‘… தம்மைப் போலவே மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கும் மரியாதை கொடுப்பவராய் பேசத் துவங்கினார் சோனியா.

‘எனக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி, திருமணம் செய்தபின் செட்டிலானதும் பாண்டிச்சேரி. நான் எம்.காம் படிச்சிட்டு என் கணவர் கூடவே ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து வந்தேன். திருமணம் ஆனதும் ஒரு சின்ன பிரேக். பிறகு குழந்தைகள் வளர்ப்பு இப்படி ஒரு பெரிய இடைவேளை ஆகிடுச்சு. தொடர்ந்து கொரோனா காலம். அந்த நேரம்தான் எதாவது வீட்டிலேயே பிஸினஸ் துவங்கலாம் என்கிற யோசனை வந்தபோதுதான் இந்த பஞ்சகவ்ய விளக்குகள் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். குறிப்பா கொரோனா, ஊரடங்கு இந்த வேளையிலே வீட்டுக்குள்ளேயே இருந்து நிறைய மன அழுத்தம். எனக்கு நானே எதிர்மறையா யோசிக்க ஆரம்பிச்சு சில நாட்கள் தூக்கமே இல்லாம கூட அவதிப் பட்டேன். அப்படியான நேரம்தான் எனக்காக இந்த பஞ்சகவ்ய விளக்குகள் செய்யத் துவங்கி, அப்படியே தெரிஞ்சவங்க, அக்கம், பக்கத்தார் எல்லாம் பரவி இன்னைக்கு ஆன்லைனிலும் பிஸினஸாகிடுச்சு’ என்னும் சோனியா பஞ்சகவ்ய விளக்கு செய்முறையையும் அதே ஆன்லைனில்தான் கற்றுக்கொண்டிருக்கிறார்.

‘யூடியூப் வீடியோக்கள் மூலம்தான் பஞ்சகவ்ய விளக்குகள் பற்றி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். அதன் பயன்கள், வழிபடும் முறைகள் எல்லாமே ஆன்லைனில் இருக்கு. பஞ்சகவ்ய விளக்குகள் எரியும் போதே வீடு முழுக்க கணபதி ஹோமம், அல்லது வீட்டுக்கான வாஸ்து பூஜை செய்யும் போது என்னென்ன வாசனைகள் வருமோ அதே ஹோமம் பூஜை நடத்தின வாசனை வீடு முழுக்க பரவும். நானே நேரடியாக பல மாற்றங்கள் எனக்குள் நடக்கறதைக் கவனிச்சேன். மன அமைதி, நல்ல தூக்கம், சுவாசிக்க சுலபமா இருந்த உணர்வு இப்படி நிறைய மாற்றங்கள். கெட்ட கனவுகள் வர்றதுகூட நின்னுடுச்சு. தொடர்ந்து இந்த விளக்குகள் கூடவே கம்ப்யூட்டர் சாம்பிராணிகளையும் இயற்கையான பொருட்கள் கொண்டு செய்து விற்பனை செய்தேன். என் வீட்டுக்காக பச்சரிசி கோல உருண்டைகள் செய்யத் துவங்கி அதையும் சிலர் கேட்க ஆரம்பிச்சாங்க. ‘என்ன உங்க வீட்டுக் கோலங்கள் மட்டும் இவ்வளவு பளிச்சென இருக்கே, எங்களுக்கும் கொடுங்க’ இப்படிக் கேட்டு வந்ததன் விளைவு பச்சரிசி கோலமாவு உருண்டைகளும் விற்பனைக்கு தயாரிக்கறேன். இதை எறும்புகள், பறவைகள் சாப்பிடலாம், நாம சாப்பிட முடியாது. ஒரு வருடம் கூட அப்படியே செம்மண் உருண்டைகள் மாதிரி இருக்கும். தேவைப்படும் போது தண்ணீரில் கலக்கி பயன்படுத்தலாம். அல்லது கோலமாவுடன் பொடியாக்கிக் கூட கலந்துக்கலாம். சிலர் அப்படியே இடிச்சி பொடியாகவும் கோலமா போடுறாங்க’ என்னும் சோனியாவிற்கு சிறு வயதிலேயே பிஸினஸ் மூளை இருந்ததாக அவர் தாயார் கூறியிருக்கிறார்.

‘ஒரு முறை என் அம்மா திண்டிவனம் வழியா ரயில்ல போகும்போது, உன்னை நாங்க இப்படியே விட்டுட்டுப் போயிட்டா, என்ன செய்வ? ன்னு கேட்டிருக்காங்க. அதற்கு நான் ‘நீங்க கொடுத்த ஒரு ஆப்பிள் என் கிட்ட இருக்கு, இதையே வைத்து ஒரு ஆப்பிளை வித்து, அடுத்து ஒரு ரெண்டு, மூணுன்னு வருகிற வருமானம் வைத்தே ஆப்பிள் கடை போட்டுடுவேன், ஆனா இந்த இடத்திலேயே தான் இருப்பேன்னு ‘சொன்னதா எங்க அம்மா இப்போதும் சொல்வாங்க. இந்தத் தொழிலும் கூட சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. சில பெண்கள் கேஷ் ஆன் டெலிவரியில் வாங்கிட்டு பணம் கொடுக்கறதில்லை. அல்லது இழுத்தடிப்பது போன்ற சவால்களும் இருக்கு. ஆனால் ஒருசில பெண்கள் வேறு ஊரிலிருந்து என் கிட்ட மொத்தமாக வாங்கி சிறு லாபத்தில் விற்பனை செய்துக்கறாங்க. இதிலே எனக்கும் லாபம், அவங்களுக்கும் ஒரு சின்ன வருமானம் கிடைக்கும். இப்படியான பெண்களுக்கும் என்னால் முடிந்தவரை பாதி தொகை வாங்கிட்டு, மீதி விற்பனைக்கு பிறகு வாங்கிக்கறேன். எல்லா பெண்களுமே எதாவது ஒரு ஆரோக்கியமான வழிகள்ல தங்களுக்குன்னு ஒரு வருமானத்தை உருவாக்கிக்கணும். நம்மை பார்க்கும் குழந்தைகளுக்கும் அந்தப் பொறுப்பு அப்போதான் வரும். இன்னைக்கு தனிமனித பொருளாதார அங்கீகாரம் ரொம்ப முக்கியம் ‘எனத் தன்னம்பிக்கையாக பேசும் சோனியா இந்த சுயதொழில் மட்டுமின்றி பகுதி நேரமாக பாண்டிச்சேரி ஆல் இந்திய வானொலியில் அறிவிப்பாளராகவும் வேலை செய்கிறார். மேலும் தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார் என்பதுதான் ஆச்சர்யமான தகவல்.
– ஷாலினி நியூட்டன்

Related posts

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இதுவரை தாங்கள் நெய் விநியோகம் செய்ததில்லை: அமுல் நிறுவனம் விளக்கம்!