செஷாம் மைக்-இல் பாத்திமா!

What you seek is seeking you – Rumi
நீ எதைத் தேடுகிறாயோ அது உன்னை தேடுகிறது – ரூமி
இந்த பொன்மொழியுடன் முடிகிறது ‘செஷாம் மைக்-இல் பாத்திமா’.
எத்தனையோ துறைகளில் பெண்கள் முன்னேறி வந்தாலும் இன்னமும் பெண்கள் நுழையாத அல்லது 1000 ஆண்களுக்கு ஒரு பெண் என்கிற விதத்தில் பெண்கள் வரும் சில தொழில் அல்லது சில துறைகள் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படித்தான் விளையாட்டுத் துறையிலும் கூட சில விளையாட்டுகளில் இன்னமும் பெண்கள் 100 ஆண்களுக்கு 4 பெண்கள் என்கிற விகிதத்தில்தான் வருகிறார்கள். ஏன் பெண்கள் கிரிக்கெட்டிற்கென இன்னமும் பல பள்ளி, கல்லூரிகளில் குழுக்கள் கூட இல்லை. விளையாட்டிலேயே இவ்வளவு தடைகள் எனில் விளையாட்டு வர்ணனையாளர் துறை எந்த நிலையில் இருக்கும். இந்த சூழலைக் கையில் எடுத்துக்கொண்டு அதில் கதை உருவாக்கியிருக்கிறார் மலையாள இயக்குநர் மனு சி.குமார். கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார்.

பாத்திமா நூர்ஜஹான்… மலப்புரம், கேரளாவைச் சேர்ந்த பாரம்பரிய மரபுகள் கொண்ட இஸ்லாமிய நடுத்தர குடும்பத்து பெண். நன்கு படித்தவர். அப்பா முனீர், அம்மா நூர்ஜஹான், அண்ணன் ஆசிப் மற்றும் ஒரு பாட்டி. எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தாலும் பாத்திமாவின் எண்ணங்கள் அனைத்தும் பிரமாண்டமாகவும் கடினமான துறையை தேர்ந்தெடுக்கும் மனநிலையிலும் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே கால்பந்து மற்றும் கார்ட்டூன் வர்ணனையாளராக வரவேண்டும் என்பதுதான் பாத்திமாவின் விருப்பம், கனவு. அவர் விருப்பத்திற்கு ஏற்ப அவர் அண்ணன் மூலம் உள்ளூர் கால்பந்து போட்டியில் வர்ணனை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த போட்டியில் அவருக்கு அவரது ஊரில் பெயரும் , பாராட்டுகளும் கிடைக்க ஆர்வம் இன்னும் அதிகரிக்கிறது. இதற்கிடையில் பாத்திமாவின் குடும்பம் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். ஆனால் பாத்திமாவின் அதிகம் பேசும் இயல்பால் அவருடைய திருமணம் நின்று விடுகிறது. வேலை கிடைக்கும் வரை ஏதாவது செய்தாக வேண்டுமே என்பதால் கொச்சியில் பயோ டெக்னாலஜி ஆய்வுக்கூடத்தில் இன்டர்ன்ஷிப் வேலை கிடைத்து அங்கே பணியில் சேருகிறார்.

கொச்சியில் பத்திரிகையாளரும் பாத்திமாவின் கல்லூரி சீனியருமான ரம்யா ஆவணியின் நட்பு கிடைக்க அவர் மூலம் கால்பந்து வர்ணனையாளருக்கான வாய்ப்பு கிடைக்கிறதா என தேடத் துவங்குகிறார் பாத்திமா. ரம்யாவும் அவரால் முடிந்தவரை உதவி செய்து கேரள கால்பந்து குழுவின் பிரசிடென்ட் ஜெயேஷ் நாயர் சந்திப்பின் மூலம் இந்திய கால்பந்து லீக் ஆட்டத்தில் வர்ணனை செய்ய ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என முயற்சி செய்கிறார். தொடர்ந்து விளையாட்டு துறை சார்ந்த ஏதேனும் வேலையில் சேரலாம் என முடிவெடுத்து ரம்யாவின் உதவியுடன் விளையாட்டு அகாடமி அட்மின் அசிஸ்டன்டாக பணியில் சேர்கிறார் பாத்திமா. அங்கே நடக்கும் ஒரு பள்ளி கால்பந்து போட்டியில் வர்ணனை செய்யும் வாய்ப்பு பாத்திமாவிற்கு கிடைக்கிறது. ஆனால் அங்கு வரும் ஜெயேஷ் பாத்திமாவை அவமானப்படுத்துகிறார். ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் துறையில் திடீரென ஒரு பெண்ணின் குரல் கேட்பதெல்லாம் சாத்தியமே அல்ல என அழுத்தமாக சொல்லி ஏளனம் செய்கிறார்.

இதற்கிடையில் வாய்ப்பு வேண்டுமானால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் என எப்போதுமான தொந்தரவுக்கும் கூட பாத்திமா அவருடைய வர்ணனை ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்து அறையை விட்டு வெளியேறுகிறார். இதற்கு மேலும் இந்த வாய்ப்பு எல்லாம் நமக்கு சரிவராது என முடிவெடுக்கும் பாத்திமா தன்னுடைய சொந்த ஊரான மலப்புரத்திற்கு சென்று விடுகிறார். ஆனாலும் அவரே விட்டாலும் வர்ணனை துறை அவரை விடுவதாக இல்லை. மீண்டும் தனது தோழி ரம்யாவிடம் இருந்து ஒரு குழந்தைகள் நிகழ்ச்சியில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் வர்ணனை செய்யும் வாய்ப்பு வருகிறது. அங்கே பாத்திமாவின் வர்ணனை அனைவரின் பாராட்டுகளைப் பெறுகிறது. மேலும் குழந்தை ஒன்று அவருக்கு சாக்லெட் கொடுத்து பாராட்டுகிறது. அந்த குழந்தையின் தந்தைதான் ‘இந்திய கால்பந்து லீக்‘ ஆட்டத்தின் நிர்வாகி சிவாவின் குழந்தை. அவரிடம் இருந்து நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வர தன் குடும்பத்தாரிடம் அனுமதி பெற்று நேர்முகத் தேர்வுக்கு செல்கிறார் பாத்திமா. அங்கே பிரேசில் வீரர் ரோபெர்டோ கார்லோஸ் ஆட்டத்தை வர்ணனை செய்யும்படி சிவா மற்றும் தீபிகா கேட்கின்றனர்.

தனது ஸ்டைலில் வர்ணனையை செய்கிறார் பாத்திமா, ஆனால் அடுத்த வருடம் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். இவ்வளவு நெருக்கடியான நிலையில் நாங்கள் ரிஸ்க் எடுக்க முடியாது என்கின்றனர் சிவாவும் தீபிகாவும். மேலும் கால்பந்து வர்ணனை என்பது வெறும் அடிக்கும் பந்தை பார்த்து பேசுவது அல்ல அதற்குப் பின்புறத்தில் இருக்கும் அறிவியலையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் தீபிகா. அதே சமயம் அந்த கான்பரன்ஸ் மீட்டிங் அறையில் அமர்ந்திருக்கும் ஜெயேஷின் நண்பர் கோப குமார் பாத்திமாவை பார்த்து ஏளனம் செய்து நக்கல் அடிக்க அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரோபெர்டோ அடித்த பந்து ஏன் ‘ரெயின்போ ஷார்ட்‘ என அழைக்கப்படுகிறது என்பதற்கு பின்னணியில் இருக்கும் அறிவியலையும் சேர்த்து விளக்குகிறார் பாத்திமா. தொடர்ந்து பாத்திமாவிற்கு ‘இந்திய கால்பந்து லீக்‘ ஆட்டத்தில் வர்ணனை செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட பிரபல கால்பந்து ஆட்டக்காரர் ஐ.எம்.விஜயன் உடன் இணைந்து மைக்கில் முதல் வார்த்தை பேசத் துவங்குகிறார் பாத்திமா. பாத்திமாவாக கல்யாணி பிரிய தர்ஷன், சிவாவாக கௌதம் வாசுதேவ் மேனன், ரம்யா பாத்திரத்தில் பார்வதி என மிகச் சில பாத்திரங்களைக் கொண்டு ஆர்ப்பாட்டம் இல்லாத ஸ்போர்ட்ஸ் பெண்ணியத் திரைப்படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மனு சி.குமார்.

இந்திய அளவிலேயே விளையாட்டு பெண் வர்ணனையாளர்கள் யார் எனக் கணக்கிட்டால் கூட மயந்தி லேஞ்சர் மட்டுமே பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். மற்றவர்களான மந்திரா பேடி, ஷிபானி தண்டேகர், அஞ்சும் சோப்ரா, சோனாலி நக்ராணி உள்ளிட்டோர் கூட விளையாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதிலும் தென்னிந்தியாவில் இருந்து ஒரு பெண் கூட இல்லை என்பதுதான் இன்னும் சோகம். இந்த பெண்கள் தொடாத விளையாட்டு வர்ணனையாளர் துறை என்னும் இந்த கான்செப்ட்டை இதுவரை இந்திய சினிமா தொட்டதே இல்லை. இதை மையமாகக் கொண்டு கதை உருவாக்கி ‘அட ஆமா!’ என நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விதத்தில் இயக்குநருக்குப் பாராட்டுகள். கல்யாணி பிரியதர்ஷன், எவ்வித அலட்டலோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் ‘எத்தனையோ பெரிய வீரர்கள் குறித்து ஆலோசனை நடக்கும் ‘இந்திய கால்பந்து லீக்’ஆட்டத்தின் கான்ஃபெரன்ஸ் அறையிலே என்னைப் போன்ற ஒரு எளிமையான பெண் பற்றி பேசியதே பெருமையாக இருக்கு. சந்தோஷம். எத்தனையோ தடைகளை இந்தப் பந்து அடித்து உடைத்திருக்கிறது. நிச்சயம் எனக்கான தடையையும் ஒரு நாள் உடைக்கும் அதுவரை காத்திருக்கிறேன்‘ என சிரித்துக்கொண்டே சொல்லும் போது அத்தனை பெண்களின் மன தடைகளும் கூட உடையும். நிச்சயம் பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள், பெண் குழந்தைகள் என அனைவரும் காண வேண்டிய திரைப்படம். ஓடிடி தளத்திலே சென்ற வாரம் வெளியாகியிருக்கிறது
– கவின்

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு