அரசுத்துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயம்: இடது தொழிற்சங்க மையம் வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் அனைத் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இடது தொழிற்சங்க மையத்தின் மாநில துணை தலைவர் ஏ.கோபால் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் அனைத்து மாவட்ட அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஊதியம் நிர்ணயம் செய்வது வழக்கம்.

எனினும், இதுவரை அவர்களுக்கு தினக்கூலி ஊதியம் நிர்ணயம் செய்யப்படவில்லை.மேலும், அனைத்து அரசு துறைகளிலும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் தினக்கூலி தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக, வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் 192 தினக்கூலி தொழிலாளர்களின் முதுநிலை பட்டியல் வெளியிட்டு, அவர்களில் 86 தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கருத்துரு அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 86 தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும், பிற அரசு துறைகளில் நீண்ட காலமாக வேலைபார்க்கும் 1000க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு நிரந்தர ஊதிய நிர்ணயம் செய்வதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

போக்குவரத்து பணிமனை உணவகங்களில் தரமான உணவு வழங்க தொழிலாளர்கள் வலியுறுத்தல் : பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை!!

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்