ஆடு திருடியதாக கட்டப்பஞ்சாயத்து ரூ3 லட்சம் அபராதத்தால் தொழிலாளி தற்கொலை: நாட்டாண்மை உட்பட 4 பேர் கைது

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கோட்டங்கள் புதூரை சேர்ந்தவர் முருகன்(48), கூலித்தொழிலாளி. இவர் நண்பருடன் சேர்ந்து அதே பகுதியில் கடந்த 17ம் தேதி நள்ளிரவு ஆடு திருடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரையும் பிடித்து ஆட்டின் உரிமையாளர் ஊர் நாட்டாண்மை செல்வராஜி மற்றும் பஞ்சாயத்தார்கள் கிருஷ்ணன், ஜீவா, சிவா ஆகியோர் முன்னிலையில் ஒப்படைத்தார். அப்போது ஆடு திருடியதற்காக பஞ்சாயத்தில் முருகனுக்கு மட்டும் ரூ3 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். நண்பனை விடுவித்துவிட்டார்களாம். இதை தொடர்ந்து பஞ்சாயத்தார் அபராத தொகையை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த முருகன் கடந்த 22ம் தேதி பூச்சி மருந்து குடித்து விட்டார்.

இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் முருகனை மீட்டு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து முருகனின் மனைவி வள்ளி(43) செங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி செங்கம் போலீசார் முருகனிடம் வாக்குமூலம் பெற்று, கட்டப்பஞ்சாயத்து செய்த நாட்டாண்மை செல்வராஜி, ஜீவா, சிவா, கிருஷ்ணன் உட்பட 10 பேர் மீது கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் செல்வராஜி உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். இதையடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Related posts

கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வாணாபுரம் உள்ளிட்ட 11 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

வெல்ல போவது யார்? கடந்த 10ம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பழனி நகரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்