தொழிலாளர் விதிமுறைகளில் மாற்றம் செய்தது சிங்கப்பூர் அரசு: இந்திய சமையல் கலைஞர்களுக்கு தேவை அதிகரிப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவில் இருந்து சமையல் கலைஞர்களை பணியமர்த்தி கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.1.22 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாக சேவை மற்றும் உற்பத்தி துறையில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் பயண பெட்டி சுமப்பவர்கள் விருந்தோம்பல் துறை திணறி வருகிறது. இது சுற்றுலாவை வெகுவாக பாதித்துள்ளது.

சமீபத்தில் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி சமையல்காரர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட மொத்தம் 27 வகையான உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக அந்நாட்டு அரசு இதுவரை கடைப்பிடித்து வந்த விதிமுறைகளை சற்று தளர்த்தியுள்ளது. இதற்கு முன்பு சீனா, மலேசியா, ஆங்காங், தென்கொரிய மற்றும் தைவான் நாடுகளில் இருந்து வேலை உரிமம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது என்.டி.எஸ். எனப்படும் பாரம்பரியமற்ற ஆதார நாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்தும் வகையில் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாயலாந்து, மியான்மர், பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து வரும் ஊழியர்களை நிறுவனங்கள் பணியமர்த்தி கொள்ளலாம். இதனால் இந்தியாவில் இருந்து வரும் சமையல் கலைஞர்கள், வெல்டர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.1.22 லட்சம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கல்குவாரியில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிரம்

மெரினாவில் போர் விமான சாகச நிகழ்ச்சி… விமானப்படை மூலம் பொதுமக்களுக்கு தொப்பி : அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சுற்றுலாப் பயணிகளுக்காக மதுரையில் ஹெலிகாப்டர் சேவை: விரைவில் தொடங்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டம்