கே.வி.குப்பம் வாரச்சந்தையில் மழையால் ஆடுகளின் விற்பனை மந்தம்

*வியாபாரிகள் ஏமாற்றம்

கே.வி.குப்பம் : மழையால் நேற்று நடந்த கே.வி.குப்பம் வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை மந்தமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் திங்கள் தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். சென்ற வாரங்களில் கிருஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு என பண்டிகைகள் இருந்ததால், அதிகமாக ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் ஆட்டுச்சந்தை கூடியது.

இதில் கே.வி.குப்பம், குடியாத்தம், காட்பாடி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. காலை எதிர்பாராத விதமாக மழை பெய்தது. இதனால் ஆடுகளை வாங்க வருபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

மேலும், சராசரியாக ஆடுகளின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை போனதால் ஆடுகள் விற்க வந்த வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிகளவில் வெள்ளாட்டு கிடாய்கள், கசையாடுகள் வரத்து இருந்ததால், ஆடுகள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எதிர்பார்த்த விலைக்கு ஆடுகள் விற்பனை ஆகாததால் பெரும்பாலானோர் ஆடுகளை விற்காமல் வீட்டிற்கு கொண்டு சென்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அடுத்த வாரம் விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கமலா ஹாரீஸுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு!!

முதலமைச்சர் உத்தரவை அடுத்து உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவியை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

கொடநாடு கொலை வழக்கு ஆக. 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு