Saturday, September 21, 2024
Home » குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்..!!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்..!!

by Lavanya
Published: Last Updated on

டெல்லி: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் தீ விபத்து: தமிழர் உட்பட 53 பேர் பலி

குவைத்தில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குவைத்தின் தெற்கு மாவட்டமான மங்கஃப்பில் 7 மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இதன் ஒரு தளத்தில் கேரளாவை சேர்ந்த கே.ஜி.ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான குறியிருப்பு உள்ளது. இங்கு தமிழ்நாடு, கேரளா, வடமாநிலங்களை சேர்ந்த 195 தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சமையலறை தீ பற்றி அருகில் இருந்த அறைகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதனால் கட்டடம் முழுவதும் தீ பற்றி கரும்புகை மூட்டம் நிலவியது. இந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் அவர்களில் 2 பேர் தமிழர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை குவைத் திற்கான இந்திய தூதர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தீ விபத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் கரும்புகை பரவி ஏற்பட்ட மூச்சு திணறலில் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் குவைத் காவலர்கள் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர். இதனிடையே கட்டட உரிமையாளர்களின் விதிமீறல் காரணமாக உயிர் பலி ஏற்பட்டிருப்பதாக குவைத் துணை பிரதமர் பகத் யூசப் அல்சபா தெரிவித்துள்ளார். ஒரே அறையில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டிருந்ததே உயிர்பலி அதிகரிக்க காரணம் என்றும் விதிமீறிய கட்டடங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அல்சபா தெரிவித்துள்ளார்.

குவைத் தீ விபத்து: வெளியுறவு துறை அமைச்சர் இரங்கல்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

குவைத் தீ விபத்து: அவரச உதவி எண்கள் அறிவிப்பு

குவைத் தீ விபத்து தொடர்பாக உதவிகளைப் பெற இந்திய தூதரகம் அவசா உதவி எண்களை அறிவித்துள்ளது. குவைத் தீ விபத்து தொடர்பாக +965 65505246 என்ற உதவி எண்ணை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.

தீ விபத்து: தகவல் கோரியது அயலக தமிழர் நலத்துறை

தீ விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டினர் நிலை குறித்து குவைத் தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல் கேட்டுள்ளது. குவைத் தமிழ் சங்கங்களின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் கோரியுள்ளோம். உயிரிழந்தவர்களின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

18 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi