குத்தகை நிலத்தில் அன்னாசி சாகுபடி!

முக்கடல் சந்திக்கும் தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் மாவட்டமாக விளங்குகிறது. அதேசமயம் விவசாயம் செழித்தோங்கும் மாவட்டமாகவும் விளங்குகிறது. இங்கு தென்னை, ரப்பர், நெல், வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தின் மலையோரக் கிராமங்களில் ரப்பர் தோட்டங்களும் அதிகமாக காணப்படுகிறது. ரப்பர் தோட்டங்களில் பலர் ஊடுபயிராக அன்னாசி பழத்தை சாகுபடி செய்து உபரி வருமானம் பார்க்கிறார்கள். சிலர் தனிப்பயிராகவும் அன்னாசியைப் பயிரிட்டு அமோக லாபம் பார்க்கிறார்கள். குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூர் பகுதியில் ரப்பர் தோட்டத்தில் குத்தகை அடிப்படையில் நீண்ட காலமாக அன்னாசி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார் பென்சிகர் என்ற முன்னோடி விவசாயி. நல்ல இயற்கை வளம் மிகுந்த மலைப்பகுதி. உயர்ந்து நிற்கும் ரப்பர் மரங்கள் காற்றுக்கு தலையசைக்கின்றன. இப்படியொரு ரம்மியமான சூழலில் அன்னாசி வயலில் பராமரிப்பு பணிகளில் தீவிரமாக இருந்த பென்சிகரைச் சந்தித்தோம். நம்மை வரவேற்று அன்னாசி சாகுபடி குறித்து விளக்க ஆரம்பித்தார்.

“குமரி மாவட்டத்தில் மலையோரக் கிராமங்களில் ரப்பர், அன்னாசி, வாசனைப் பயிர்களான திப்பிலி, நல்லமிளகு, ஏலக்காய், ஜாதிக்காய் உள்ளிட்ட பயிர்களை பலர் சாகுபடி செய்து வருகிறார்கள். இதே பகுதியில்தான் நானும் கடந்த 15 ஆண்டுகளாக 5 ஏக்கர் நிலத்தில் அன்னாசி சாகுபடி செய்து வருகிறேன். சொந்தமாக நிலம் இல்லாததால் 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அன்னாசி விவசாயம் செய்து வருகிறேன். ஒரு ஏக்கர் நிலத்தை 3 ஆண்டு குத்தகை எடுக்க ரூ.1.50 லட்சம் செலவாகும். அதுவும் நான் குத்தகைக்கு எடுத்த நிலம் ரப்பர் தோட்டமாக இருக்கிறது. அந்த ரப்பர் தோட்டங்களுக்கு நடுவே ஊடு பயிராக அன்னாசியை சாகுபடி செய்து வருகிறேன். கேரளா போன்ற மாநிலங்களில் அன்னாசிக்கென்று தனியாக தோட்டம் அமைத்து, அதில் முழுவதுமாக அன்னாசியை சாகுபடி செய்வார்கள். இங்கு பெரும்பாலும் ரப்பர் தோட்டங்களில்தான் அன்னாசியை சாகுபடி செய்கிறோம்.
அன்னாசியைப் பொருத்தவரை ஒரு ஏக்கர் நிலத்தில் 8 ஆயிரம் நாற்றுகள் வரை நடலாம்.

2 ரப்பர் மரங்களுக்கு இடையே 15 அடி இடைவெளி இருக்கும். இரு பக்கமும் உள்ள ரப்பர் மரங்களில் இருந்து மூன்று, மூன்று அடி இடைவெளி விட வேண்டும். மீதமுள்ள 9 அடி இடைவெளியில் ஒன்றரை அடிக்கு 1 என 6 அன்னாசி நாற்றுகளை நடவு செய்யலாம். இந்த அளவில் நடவு செய்ய 8 ஆயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும். நாற்றுகளை நடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நிலத்தை நன்றாக ஆழமாக உழ வேண்டும். மலை நிலம் என்பதால் ஆழ உழவு அவசியம். டிராக்டர் வைத்தோ, ஏறு பூட்டியோ உழ முடியாது. இதனால் பொக்லைன் இயந்திரம் மூலம்தான் நிலத்தை உழ முடியும். ஒருமுறை நடுகிற அன்னாசி செடியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு அறுவடை எடுக்கலாம். சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறை அன்னாசியில் இருந்து அறுவடை எடுக்கலாம். நடவு செய்த ஒரு மாதத்தில் பாக்டம்பாஸ் உரம் இடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 மூட்டை தேவைப்படும். அடுத்து, நடவு செய்து 5 மாதம் ஆன பிறகு பாக்டம்பாஸ், டிஏபி, கடலைப்புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு, பொட்டாஷ் ஆகிய உரங்களை மொத்தமாக சேர்த்து 10 மூட்டை கலப்பு உரமாக கொடுக்க வேண்டும்.

7வது மாதத்தில் அன்னாசி செடியில் பூ பூக்கும். அப்போது பயிர்களுக்கு எத்தனால் தெளிப்போம். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி எத்தனால் கலந்து தெளிக்கவேண்டும். இதை நாம் தேவைக்கு ஏற்ப அடிக்க வேண்டும். அப்போதுதான் பூ பெரிதாக பூத்து, பழம் பெரிதாக வரும். அன்னாசிக்கு வெயில் காலத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும். தண்ணீர் விடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும் பயிர்கள் கருகாது. மழைக்காலத்தில் தேவையான தண்ணீரை இந்த பயிர்கள் எடுத்துக்கொள்ளும். அன்னாசி பயிர்களை வாடல் நோய் அதிக அளவு தாக்கும். அப்போது தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் மருந்து வாங்கி தெளிப்பேன். 10வது மாதத்தில் முதல் அறுவடையைத் தொடங்கலாம். 12வது மாதம் வரை நாம் அறுவடையை தொடர்ந்து செய்யலாம்.

அன்னாசிப் பழத்தைப் பொருத்தவரை முதல் ஆண்டில் சாகுபடி மேற்கொள்ளும்போது கன்று ஒன்று ரூ.8க்கு வாங்க வேண்டி இருக்கும். அறுவடைக்குப் பிறகு அந்தச் செடியில் இருந்து பக்கக்கன்றுகள் தோன்றும். அதில் இருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் சாகுபடி எடுக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் அன்னாசி எந்த நோய் தாக்குதலும் இல்லாமல் நல்ல முறையில் காய்த்து வந்தால் அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் எடுக்கலாம். குறைந்தபட்சமாக 6 டன் வரையும் எடுக்கலாம். சராசரியாக 7 டன் வரை கிடைக்கும். ஒரு கிலோ அன்னாசி அதிகபட்சமாக ரூ.40க்கும், குறைந்தபட்சமாக ரூ.25க்கும் விற்பனை ஆகும். ஒரு கிலோ அன்னாசி ரூ.30க்கு விற்றால் ஒரு டன் அன்னாசிக்கு ரூ.30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். 7 டன் மகசூல் கிடைக்கும் பட்சத்தில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வரை ஒரு ஏக்கரில் வருமானம் பார்க்கலாம். 3 ஆண்டுகளுக்கு ரூ.6 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு செலவு என்று பார்த்தால், உழவு, மருந்து தெளிப்பு, நாற்று, நடவு என முதல் வருடத்திற்கே ரூ.3 லட்சம் வரை செலவாகும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த செலவுகள் குறைவாகி அறுவடை செய்யும்போது மட்டுமே செலவாகும்’’ என்கிறார்.

விலை நிர்ணயம்

`குமரி மாவட்டத்தில் அன்னாசிப்பழம் சீசன் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கும். அந்த நேரத்தில் விலை அதிகமாக கிடைத்தால் நல்ல லாபம் கிடைக்கும். சில நேரங்களில் ஒரு கிலோ அன்னாசி ரூ.5க்கு கொள்முதல் செய்வார்கள். அப்போது செலவு செய்த பணம் கூட கிடைக்காது. ஆனால் சந்தைகளில் வியாபாரிகள் ஒரு கிலோ அன்னாசிப் பழம் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்வார்கள். விவசாயிகளிடம் ரூ.30க்கு மேல் வியாபாரிகள் கொள்முதல் செய்தால்தான் லாபம் கிடைக்கும். எனவே அன்னாசி சாகுபடி செய்யும் விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் அன்னாசிப் பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கிறார் பென்சிகர்.
தொடர்புக்கு:
பென்சிகர்: 94881 31508.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு