குற்றாலத்தானைப் போல் உற்றார் நமக்கு வேறு யார்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சைவ சமயத்தில் சில தலங்கள் சில வகையில் முக்தி தர வல்லவை. அவை முக்தித் தலங்கள் என்று போற்றப் படுகின்றன. திருவண்ணாமலையை நெஞ்சில் நினைக்கவும், சிதம்பரத்தை தரிசிக்கவும், திருவாரூரில் பிறக்கவும், காசியில் இறக்கவும் முக்தி கிடைக்கும். ஆனால், உலகிலேயே ஒருதலம் மட்டும்தான் அங்கு பிறந்தாலும், இறந்தாலும், அதைத் தரிசித்தாலும், நெஞ்சார நினைத்தாலும் முக்தி வழங்கும் தலமாக விளங்குகிறது. அத்தலம்தான் திருக்குற்றாலம். இச்சிறப்பை,

‘‘புந்தியுற நினைந்தார்க்கு அருணகிரி தரிசனைக்கு புலியூர்பேறு
நந்துதவழ் திருவாரூர் பிறந்தார்க்கே, இறந்தார்க்கு நல்கும் காசி
எந்தையார் திருவருளாற் பிறந்தார்க்கும் இறந்தார்க்கும் எதிர் காண்பார்க்கும்
சிந்தையுற நினைந்தார்க்கும் அழியாத கதிகொடுக்கும் திருக்குற்றாலம்’’

என்கிறது குற்றாலத் தல மகிமைச் செய்யுள்.

சிவபரம்பொருள் நடனம் புரிந்த ஐந்து சபைகளுள் இத்தலம் சித்ரசபை (ஓவிய அவை) ஆகும். ஒவ்வொரு சபையிலும் இறைவன் உலோகத் திருமேனியாக அருள்செய்வார். ஆனால், இங்கு மட்டும்தான் எளிமையாக ஓவிய வடிவில் காவியமாகத் திகழ் கிறார். அதனால், இந்த நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் கிடையாது. இங்கு இறைவன் நீராடாமல் இருந்தாலும், தன்னைத்தேடி வருகின்ற அடியார்கள் அனைவரையும் சாதி, மத, பேதம் பார்க்காமல் நீராட்டித் தூய்மை செய்கிறார். ஆம், குற்றாலத்திற்கு செல்வோரில் பலர் அருவியிலே நீராடச் செல்கின்றனர். அதில் எல்லா மதத்தவர்களும் அனைத்துச் சாதியினரும் இருப்பர். குற்றாலத்திலுள்ள பாறைகள் எங்கும் சிவலிங்கம் பொறிக்கப் பட்டிருக்கும்.

அந்தப் பாறைகளின் மீதுள்ள சிவலிங்கத்தின் மீது பட்டுத்தான் அருவிநீர் கீழே பொழியும். ஆகவே, அதில் யாரெல்லாம் நீராடுகிறார்களோ அவர்களின் பாவம் கழுவப்படும் என்பது திண்ணம். சகலருடைய பாவங்களைப் போக்கும் சமாதானக் கடவுளாக சிவபெருமான் இங்கு திகழ்கிறார். தீர்த்தமாகவும், சித்ரமாகவும், சிவலிங்கமாகவும் அருளும் இத்தலத்திலுள்ள தலவிருட்சத்திற்கு தனிப்பெரும் சிறப்புண்டு.

எந்தத் தலத்திலுள்ள விருட்சத்திற்கும் தனிப்பதிகம் கிடையாது. ஆனால், இந்தத் தலத்திலுள்ள ‘‘குறும்பலா’’ மரத்திற்கு மட்டும் ஞானசம்பந்தர் தனிப்பதிகமே பாடித் தந்துள்ளார்.‘‘திருந்த மதிசூடித் தெண்ணீர் கடைகரந்து தேவிபாகம்பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காமுறைதல் புரிந்த செய்வர்இருந்த இடம் வினவில் ஏலம்கமழ் சோலையின் வண்டு யாழ்செய் குருத்தமணம் நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்பலாவே’’என்று தொடங்கி ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ‘குறும்பலாவே’ என்று தலவிருட்சத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் திருஞானசம்பந்தர்.

இவ்வூரில் குறுகிய ஆலமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் ‘குற்றாலம்’ என்று பெயர் வந்திருந்தாலும், தலவிருட்சமான குறும்பலாவின் பெயரால்தான் இறைவன் `குறும்பலாவீசர்’ என்று அழைக்கப்படுகிறார். அதற்குக் காரணம், இந்தக் குறும்பலா மரத்தில் வளர்ந்துள்ள கிளைகளெல்லாம் சிவலிங்கம்; கிளையில் விளைந்த கனியெல்லாம் சிவலிங்கம்; அந்தக் கனியிலுள்ள சுளைகளெல்லாம் சிவலிங்கம்; சுளைகளின் நடுவேயுள்ள விதைகளெல்லாம் சிவலிங்கம் என,

‘‘கிளைகளாய்க் கிளைத்தபல கொப்பெல்லாஞ் சதுர்வேதம் கிளைகள் ஈன்ற
களையெல்லாம் சிவலிங்கம், கனியெல்லாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற
சுளையெல்லாம் சிவலிங்கம், வித்தெல்லாம் சிவலிங்கம் சொரூபமாக
விளையுமொரு குறும்பலவின் முளைத்தெழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே’’
என்கிறது திருக்குற்றாலக் குறவஞ்சி.

இதனால், குறும்பலாவின் கிளை, களை, பழம், சுளை அதன்விதை, அந்த லிங்க வடிவிலான விதையிலிருந்து முளைக்கும் மரம் என அனைத்தும் சிவலிங்கத்தை நினைவூட்டுவதால் இத்தலத்து இறைவனுக்கு இந்தக் ‘‘குறும்பலா ஈசன்’’ என்னும் பெயர் பொருத்தமானதுதான். இந்தக் குறும்பலா ஈசருக்கும் குறுமுனியாகிய அகத்தியருக்கும் ஒரு சம்பந்தமுண்டு. சிவபெருமானின் திருமணத்தின்போது அனைவரும் கயிலைக்குச் சென்றதால் வடக்குப்பகுதி தாழ்ந்து தெற்குப்பகுதி உயர்ந்தது. அப்போது சிவபெருமான், தனக்கு இணையானவன் தமிழ்முனிவனாகிய அகத்தியன்தான் என்று கருதி, தெற்கிலுள்ள பொதிகைமலைக்குச் செல்லுமாறு அகத்தியரைப் பணித்தார். இவ்வரலாற்றை;

‘‘சிவனைநிகர் பொதியவரை முனிவன்’’ என்று குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர். அப்போது பொதிகைமலைக்குச் செல்லும்போது இந்த குற்றாலத்தில் உறையும் இறைவனை வணங்க விரும்பினார் அகத்தியர். காரணம், அப்பரடிகள், உயிர்ப்பறவை இவ்வுடலுடன் ஊடல்கொண்டு பறக்கும்போது இந்தக் குற்றாலத்து இறைவன் மட்டும்தான் உறுதுணையாக வருவான் என்பதை,

‘உற்றார் யார் உளரோ! உயிர்கொண்டு போம்பொழுது
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு
உற்றார் யார் உளரோ!’
என்று திரு அங்கமாலையில் பாடியிருக்கிறார்.

இதுமட்டுமா? அறிவால் சிவமே ஆகிய அருள்மணிவாசகரும் உற்றார், உறவினர், ஊர், பெயர், கற்றோர் மற்றும் கல்வி என இவை எதுவும் வேண்டாம். எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராத பசுவைப்போன்று இந்தக் குற்றாலத்து இறைவனின் திருவடியில் அன்பு செலுத்தினால் போதும் என்பதை,

‘‘உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனிது அமையும்
குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா உன் குறைசூழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே’’

என்று மணிவாசகரே கசிந்துருகிய தலமல்லவா?!

அதனால்தான், குற்றாலத்து இறைவனைக் கும்பிட எண்ணினார் குறுமுனி.

அப்போது இத்தலம் வைணவத்தலமாக மாறியிருந்தது. அதனால் அருகிலே உள்ள இலஞ்சியில் எழுந்தருளியுள்ள இளம்பூரணனான முருகனை இறைஞ்சினார் அகத்தியர். இலஞ்சி முருகன் எல்லோருக்கும் அருள்பவன். அதிலும் தமிழ்ப் புலவர்களுக்கு தாராளமாக அருள்பவன். ஆம், எல்லாக் கடவுளர்களும் வாழ்த்தினால்தான் வாழவைப்பர். ஆனால், இந்த இலஞ்சி முருகனோ, தமிழ்மொழியில் திட்டினாலேயே வாழ வைப்பார். இதனை,

‘‘மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழவைப்பான் – வெய்ய வாரணம்போல்
கைதான் இருபதுடையான் தலைபத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே’’

என்று அருணகிரியார் அலங்கரித்திருக்கிறார் கந்தர் அலங்காரத்தில்.

ஆகவே, அகத்தியர் இலஞ்சி முருகனை இறைஞ்ச, ‘வைணவரைப் போல் பன்னிரண்டு நாமம் (துவாதச நாமம்) போட்டுக் கொண்டு செல்லுங்கள்” என்றருளினான், பன்னிருகரத்தோன். அதன்படியே அகத்தியரும் செல்ல, கருவறைக்குள்ளும் அனுமதித்தனர். அப்போது உயர்ந்த பெருமாளின் தலையில் கைவைத்து, ‘‘குறுகுக! குறுகக’’ என்று சொல்ல, பெருமாள் குறுகிய சிவபெருமானாக மாறினார் என்பர். இன்றும், இந்த இறைவன் திருமேனியில் அகத்தியரின் கரம் பட்ட அழகிய வடு இருக்கிறதாம். அகத்தியர் கை வைத்ததாலும் அருவி அருகிலேயே இருப்பதாலும் இறைவனுக்குத் தலை வலிக்கக்கூடாது என்று அனுதினமும் காலையில் இறைவனுக்கு தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

இரவில் கசாயமும் திருவமுதாக ஊட்டப்படுகிறது. முன்னர் பெருமாளுடன் இருந்த ஸ்ரீதேவி பூதேவித் தாயாரே இன்று மகாமேருவாவும் அம்பிகையாகவும் அருளுகின்றனர் என்பர். அர்ஜுனன் தன் வழிபடுமூர்த்தியாகிய சிவலிங்கத்தை சம்புடத்துடன் தொலைத்துவிட்டான். அப்போது இத்தலத்தில், மேற்கு நோக்கியவாறு சோமநாதர் என்ற லிங்கத்தை வைத்து வழிபாடு செய்து, இழந்த இறைவனைப் பெற்றான் என்பது தலபுராணச் செய்தி. இந்த அர்ஜுனன் வழிபட்ட சோமநாதரும், அவரின் ஆலயத்திற்கு அருகிலேயே விநாயகரும் மேற்கு நோக்கியிருக்கிறார்.

அங்கு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் மலைமுகடு, அதை விஞ்சும் விமான கலசம், இறைவன் திருவருளை நிகர்த்த அருவி, சோமநாதர், விநாயகர் என இறைவனையும், இயற்கையும் ஒருசேர கண்ணால் உண்டு மகிழலாம்.நமசிவாய என்ற திருவைந்தெழுத்தில் ‘ம’ என்ற எழுத்துக்குரிய இத்தலம், இறைவனின் ஐந்தொழில்களில் மறைதல் (த்ரௌபவம்) தொழிலுக்கு உரிய தலமாகும். மறைத்தல் நிகழ்ந்தால் அருளல் தானாக நிகழும். நம் பிறவித்துன்பத்தை நீக்கும் இத்தலத்திற்கு;

பிதுர் கண்டம் தீர்த்தபுரம்,
சிவத்துரோகம் தீர்த்தபுரம்,
மதுவுண்டான் உயிர் மீட்டபுரம்,
பவர்க்க மீட்டபுரம், வசந்தம் பேரூர்,
முதுகங்கை வந்தபுரம்,
செண்பகாரணியபுரம், முக்தி வேலி
நதிமுன்றில் மாநகரம், திருநகரம்,
நன்னகரம், ஞானப்பாக்கம்,
வேடன் வலஞ்செய்தபுரம், யானை பூசித்தபுரம், வேத சக்திபீடபுரம்,
சிவ முகுந்த பிரமபுரம், முனிக்கு உருகும் பேரூர், தேவகூடபுரம்,
திரிகூடபுரம், புடார்ச்சுனபுரம்,
குறும்பலா விசேடபுரம்

போன்ற பல பெயர்கள் விளங்கினாலும், திருகூடராசப்பக் கவிராயர் திருக்குற்றாலத்தை மையமாக வைத்துக் குறவஞ்சி பாடியதால் என்னவோ! குற்றாலம் என்ற பெயரே நிலைத்துவிட்டது. இந்தக் குற்றாலத்து இறைவனை, எமன் வரும் முன்னே எமன்வந்து, உயிரை எடுத்து, பாலூற்றி உற்றார் அழும் முன்பே, வாயார வாழ்த்த வேண்டும் என்பதை,

‘‘காலன் வரும்முன்னே, கண்பஞ் சடைமுன்னே
பாலுன் கடைவாய்ப் படுமுன்னே – மேல்வீழ்ந்து
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு’’

என்று அன்புக் கட்டளையிடுகிறார் பட்டினத்தார்.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

Related posts

குறைகளற்ற நிறைவான வாழ்வருளும் தேவி

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள்

கருவூர்த் தேவர்