உயிரினும் மேலானவை!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குறளின் குரல்

மனித வாழ்வில் உயிரைவிட மேலானது ஒன்று உண்டா? வாழ்வு என்பதே உயிரோடு இருப்பது தானே? உயிர் போய் விட்டால் பின்னர் வாழ்வு ஏது? ஆனால் வள்ளுவர், உயிரைவிட மேலானவையும் உண்டு என்கிறார். அவை போய் விட்டால் பின்னர் உயிர் இருந்தும் எந்தப் பயனுமில்லை என்கிறார். அவை போகுமாறு அனுமதிப்பதைவிட, உயிரை விட்டுவிடுவதே நலம் என்கிறார். மானம் போனால் வாழ்ந்து பயனில்லை. புறங்கூறி வாழ்வதை விட சாவதே நல்லது. பகைவரிடம் பணிந்து வாழ்வதைவிட உயிரை விட்டுவிடலாம். ஒருவர் கொடு என்று இரந்து கேட்டு அவருக்கு நாம் எதையும் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்குமானால், அப்போது வாழ்வதைவிட இறப்பது மேல்.இப்படிச் சிலவற்றை உயிரை விடவும் மேலானவையாக வள்ளுவர் உரத்துச் சொல்கிறார்.

‘‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.’’
(குறள் எண் 969)

உயிர் விட்டுத்தான் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், உயிரை விடுவதை வள்ளுவர் ஒப்புக்கொள்கிறார். கவரிமான் தன் உடலில் உள்ள மயிர் நீங்கினால் பின் வாழாது. அதுபோல், மானம் நீங்கினால் உயிர் நீப்பது நல்லது. தன் நிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்! என இந்தக் குறளில் வரும் மானம் என்ற சொல்லுக்கு விளக்கம் தருகிறார் திருக்குறளின் புகழ் பெற்ற உரையாசிரியர்களில் ஒருவரான பரிமேலழகர். மானமே உயிரை விடப் பெரிதென்றும், மானமழியாது உயிரை விடுதல் நல்லது என்றும் சொல்கிறது ஔவையார் அருளிச்செய்த, நல்வழியில் வரும் ஒரு நேரிசை வெண்பா.

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை சிச்சீ!
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்!

நல்வழி சொல்லும் கருத்தையே மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதன் சேந்தனார் இயற்றிய இனியவை நாற்பது நூலும் வலியுறுத்துகிறது.

மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே!
தானம் அழியாமை தானடங்கி வாழ்வினிதே
ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது

– என்கிறது அது.

பெருந்தகைமை என்ற நற்குணமும் மானத்தோடு தொடர்புடையது. பெருந்தகைமைக்கு ஊறு நேருமானால் தொடர்ந்து உயிர்வாழ்வதில் எந்தச் சிறப்பும் இல்லை.

‘‘மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து.’’
(குறள் எண் 968)

பகைவர்களுக்குப் பணியாமல் வாழ வேண்டும். அவ்வாறில்லாது பகைவர்களின் பின்சென்று தன்னோடு பொருந்தாதவரிடம் பணிந்து வாழ்வதைவிட உயிரை விடுவது மேல்.

‘‘ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.’’
(குறள் எண் 967)

கண்ணெதிரே இருக்கும்போது ஒருவனை உயர்த்திப் பேசுவதும் அவன் சென்றபின் அவனது முதுகிற்குப் பின்புறம் அவனைப் பற்றித் தாழ்வாகப் பழித்துப் பேசுவதும் சான்றோர் செய்கையல்ல.

‘‘புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.’’
(குறள் எண் 183)

சாதலை விடக் கொடியது இன்னொன்று இல்லை. ஆனால் ஒருவர் இரந்து கேட்டும் அவருக்கு எதையும் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்குமானால், அப்போது சாதல் கூட இனியதுதான் என்கிறது வள்ளுவம்.

‘‘சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.’’
(குறள் எண் 230)

மானம் அழிந்தால் உயிரை விடுவதற்கென்று சங்க காலத்தில் ஒரு நெறி இருந்திருக்கிறது. `வடக்கிருத்தல்’ என அது அழைக்கப்பட்டது. வடக்குத் திசை நோக்கி அமர்ந்து எதையும் உண்ணாது சில நாட்களில் உயிரை விட்டு விடுதலே வடக்கிருத்தல். சங்க காலத்தில் போரில் புறமுதுகிட்டு ஓடி அதனால் முதுகில் புண்பட்டவர்கள், அதைப் பெரும் அவமானமாகக் கருதுவர். அப்போர்க்களத்திலேயே வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து அவர்கள் உயிரைப் போக்கிக் கொள்வார்கள்.

இவ்விதம் உயிரை மாய்த்துக்கொண்டவர்களை, வீரர்களாகவே கருதி அவர்களுக்கு நடுகல் எழுப்பி வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. சேரமன்னனான பெருஞ்சேரலாதன், கரிகால் சோழனோடு போரிட்டான். அப்போது கரிகால் சோழன் எய்த அம்பு, சேரமன்னன் மார்பில் பாய்ந்தது. அது அவன் முதுகையும் புண்ணாக்கியது.முதுகில் புண் ஏற்பட்டதால் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தான்.

அவ்வாறு வடக்கிருந்தன் மூலம் பெருஞ்சேரலாதன் தன்னைப் பற்றிய களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது. இச்செய்திகளைப் புறநானூறு பதிவு செய்துள்ளது. மன்னன் கோப்பெருஞ்சோழனும் புலவர் பிசிராந்தையாரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டு நட்புக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு போதும் நேரில் சந்தித்ததில்லை. கோப்பெருஞ்சோழனின் புதல்வர்கள் அரசபதவிக்கு ஆசைப்பட்டுத் தந்தையோடு போர் தொடுத்தார்கள். தன் புதல்வர்களே தன்மேல் போர் தொடுத்ததால் மனமொடிந்த சோழ மன்னன், வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தான். அப்போது அவன் சொன்ன சொல்தான் விந்தையானது.

தனக்காகப் பறிக்கப்பட்ட குழி அருகே தன் நண்பரான புலவர் பிசிராந்தையாருக்காகவும் ஒரு குழி தோண்டி வைக்குமாறு வேண்டினான் அவன். பிசிராந்தையார் தன்னோடு வடக்கிருந்து உயிர் துறப்பார் என்றான்! கேட்டவர் நகைத்தனர். முன் எப்போதும் பார்த்தேயிராத நண்பர் தனக்காக உயிரையும் துறப்பார் என மன்னன் சொன்னது நகைப்புக்குரியதாகவே எல்லோருக்கும் தோன்றியது.

ஆனால் என்ன ஆச்சரியம்! மன்னன் எதிர்பார்த்தபடி அவன் வடக்கிருப்பதைக் கேள்விப்பட்ட பிசிராந்தையார் தொலைதூரத்திலிருந்து அவனை முதல் முறையாகப் பார்க்க வந்தார். அதுமட்டுமல்ல, தன் உற்ற நண்பன் பிரிவைத் தன்னால் தாங்கிக் கொண்டு தொடர்ந்து உயிர்வாழ முடியாது என்று தானும் அவனோடு வடக்கிருந்து உயிர் துறந்தார். இந்த அரிய நிகழ்வைக் கண்ட மற்றொரு புலவரான பொத்தியார் நடந்த சம்பவத்தால் வியப்பின் எல்லைக்கே சென்றார்.

வருவான் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே!

என இந்நிகழ்வு குறித்து ஆச்சரியப்பட்டுப் பாடல் பாடினார் புலவர் பொத்தியார்.

நம் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் தற்கொலை முயற்சி பற்றி தகவல்கள் இரண்டு இடங்களில் வருகின்றன. ஆனால் அந்த இரு சந்தர்ப்பங்களிலும் தற்கொலை நிகழாமல் தடுக்கப்பட்டுவிட்டது. சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் சிறையிருந்த அன்னை சீதாப் பிராட்டி, ஸ்ரீராமனைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காத சூழலில் மனச்சோர்வு அடைகிறாள். தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறாள். அதன் பொருட்டு, போதுலா மாதவிப் பொதும்பர் எய்தினாள் சீதை என்கிறார் கம்பர்.ஆனால், தக்க நேரத்தில் சிம்சுபா மரத்தின் மேலிருந்து ராம நாமத்தைச் சொல்லி, சீதையின் எண்ணத்தைத் திசைதிருப்பி அவள் உயிரைக் காக்கிறான் அவள் மகனே போன்ற ஆஞ்சநேயன்.

அப்படி உயிர் காக்கப்பட்ட சீதை
மனமகிழ்ந்து சொல்லும் வாசகங்களைத் தாங்கிய பாடல் இதோ:
அரக்கனே ஆக வேறோர்
அமரனே ஆக அன்றிக்
குரக்கினத் தொருவனே தான்
ஆகுக கொடுமை யாக
இரக்கமே ஆக வந்திங்கு
எம்பிரான் நாமம் சொல்லி
உருக்கினன் உணர்வைத் தந்தான்
உயிர்க்கிதின் உதவி யுண்டோ?

அனுமன், தன் உயிருக்கு உதவி செய்ததாக சீதை வாக்கு மூலம் கொடுக்கிறாள். அனுமன், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சீதா தேவியின் உயிரை மட்டுமல்ல, அதே முயற்சியில் ஈடுபட்ட பரதன் உயிரையும் காக்கிறான் என்ற செய்தியும் ராமாயணத்தில் இடம் பெற்றுள்ளது.பதினான்காண்டு வனவாச காலம் முடிந்துவிட்டது. ஆனால் ராமன் அயோத்திக்கு வந்து சேரவில்லை. ராமன் வராததால் அக்கினிப் பிரவேசம் செய்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறான் பரதன்.

சத்துருக்கனனிடம் அயோத்தியின் அரசாட்சியை ஏற்குமாறு வேண்டுகிறான். நெருப்பில் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் உத்தேசத்தில் அக்கினியை மும்முறை வலம் வருகிறான். கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகிய ராஜமாதாக்கள் மூவரும் குலகுரு வசிஷ்டரும் எண்ணற்ற குடிமக்களும் அந்தக் காட்சியைப் பெரும் பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மூன்றாம் முறை பரதன் அக்னியை வலம் வரும் போது ராமனால் முன்கூட்டியே அனுப்பப்பட்ட அனுமன், `ஜெய் ஸ்ரீராம்’ என்றவாறு பரதன் முன் வந்து குதிக்கிறான்.

ராமபிரான் அயோத்தியை நோக்கி வந்து கொண்டேயிருக்கும் இனிய செய்தியைச் சொல்கிறான். அந்த மங்கலச் செய்தியைக் கேட்டு, பரதன் தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான் என்கிறது ராமாயணம்.

ரஜபுத்திர வீராங்கனைகள், எதிரிகளால் தங்கள் மானத்திற்கு பங்கம் நேரக் கூடும் எனக் கருதிய தருணங்களில் நெருப்பு மூட்டி, கூட்டம் கூட்டமாக அதில் பாய்ந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற தகவல் இந்தியச் சரித்திரத்தில் பதிவாகியுள்ளது. மகாத்மா காந்தியின் பேரன்பைப் பெற்ற வரும், பகவத் கீதைக்கு உரை எழுதியவரும், பூமிதான இயக்கத்தின் தந்தையுமான சுதந்திரத் தியாகி வினோபா பாவே, தம் இறப்பைத் தாமே தேர்ந்தெடுத்தார்.

வடஇந்தியாவில், வார்தா மாவட்டத்தில் உள்ள பிரம்ம வித்யா மந்திர் ஆசிரமத்தில், தம் இறுதிக் காலத்தைக் கழித்த அவர், சமண மதத்தில் விவரித்துள்ளபடி சந்தாரா எனப்படும் உண்ணா நோன்பை மேற்கொண்டார். உணவை மட்டுமல்லாமல், மருந்துகளையும் ஏற்க மறுத்த அவர், கொஞ்ச கால உண்ணாவிரதத்திற்குப் பின் தம் எண்பத்தேழாம் வயதில் தாமே வலியத் தம் மரணத்தை ஏற்றுக் கொண்டார். உயிரை விடாமலே சமாதியில் ஆழ்வதை ஜீவசமாதி நிலை என்கிறார்கள். மகான்களில் சிலர் ஜீவசமாதி அடைந்ததை ஆன்மிக வரலாறு பதிவு செய்துள்ளது. ஸ்ரீராகவேந்திரர், தான் உயிரோடிருக்கும்போதே விரும்பி சமாதியில் ஆழ்ந்தவர். அவரது ஜீவசமாதி மந்திராலயத்தில் உள்ளது. பாரத தேசத்தில் இது போன்ற ஜீவ சமாதிகள் பல ஆங்காங்கே உள்ளன.

வள்ளலார் பூட்டப்பட்ட அறைக்குள் நிஷ்டையில் அமர்ந்து, பஞ்ச பூதங்களால் ஆன தன் உடலைப் பிரித்துப் பஞ்ச பூதங்களிலேயே கரைத்து மறைந்துவிட்டார் எனச் சொல்லப்படுகிறது. ராகவேந்திரர், வள்ளலார் போன்ற மகான்கள் மரண மிலாப் பெருவாழ்வு வாழ்பவர்கள். இன்றும் அவர்களின் அருளாட்சி தொடர்கிறது.“பம்பாய்’’ திரைப்படத்தில் ஒலிக்கும் வைரமுத்துவின் பாடல், `உயிரே.. உயிரே.. வந்து என்னோடு கலந்துவிடு!’ என உயிருக்குயிரான காதலைப் பற்றிப் பேசுகிறது.

“கற்பகம்’’ திரைப்படத்தில் ஒலிக்கும் `மன்னவனே அழலாமா?’ என்ற பாடல், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராய் இருந்ததைப் பேசுகிறது. `மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமாஉன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க…’தமிழ்த் திரைப்பாடல்கள் பல காதலைப் பற்றிப் பேசும்போது, அது உயிருக் குயிரான காதல் என்றே பேசுகின்றன. காதலுக்காக உயிரையே விட்டுவிடும் கதைப்போக்கும் பல திரைப்படங்களில் உண்டு.

உயிர் மிக மிக முக்கியமானதுதான். தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி போன்ற அற்ப காரணங்களுக்காக உயிரைத் துறப்பது கண்டிக்கத் தக்கதுதான். ஆனால் மிக மேன்மையான குறிக்கோள்களுக்காக உயிரைத் துறப்பது பெருமிதம் தருவது எனக் கூறுகிறது தமிழ் வேதமான திருக்குறள். தமிழர்கள் உயிரை விடவும் மானத்தையும், அதுபோன்ற உயர்ந்த விழுமியங்களையும் போற்றியிருக்கிறார்கள் என்பதற்குத் திருக்குறளே சான்றாக விளங்குகிறது.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Related posts

ஆடி அமாவாசை: காகத்திற்கு இப்படி உணவு வைத்து பாருங்க… வாழ்க்கை உயரும்!!

ஆடி தகவல்கள்

சகல நோயும் தீர்க்கும் சாம்பார் சாத பிரசாதம்!