குன்றத்தூர் திருஊரக பெருமாள் கோயிலில் ரூ.38 லட்சம் செலவில் புனரமைக்க பாலாலயம்

குன்றத்தூர்: குன்றத்தூரில் திருஊரகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோயில், கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. அதனை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட நாட்களாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையின்படி, ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கோயிலின் ராஜகோபுரம் புதிதாக வண்ணம் பூசுவது, புதிய தரைத்தளம் அமைப்பது, கோயில் கட்டிடங்களில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பாலாலயம் விழா நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக, கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகளுடன், ஓமங்கள் வளர்க்கப்பட்டு, கலசங்களில் புனிதநீர் எடுத்துச்செல்லப்பட்டு, பாலாலயம் செய்யும் இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்து ஊற்றப்பட்டது. இதையடுத்து கோயிலில் உள்ள மூலவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மாற்று இடத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. பாலாலயம் முடிவடையும் வரை பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் குன்றத்தூர் முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் செயல் அலுவலர் கன்யா ஆகியோர் மேற்கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை