கும்மிடிப்பூண்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சசிகாந்த் செந்தில் எம்பி

கும்மிடிப்பூண்டி: நீட் தேர்வு மோசடிகள் அம்பலமான பிறகு அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வு எதிர்ப்பை தமிழ்நாடு முன்னின்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மக்கள் நலனை குறித்து சிந்திக்காத ஒன்றிய அரசுதான் என திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 5.72 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அமோக வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி பெருவாயில், கும்மிடிப்பூண்டி பேருர், பெத்திகுப்பம், சிந்தலகுப்பம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் திறந்த ஜீப்பில் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்திலுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டியில் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு சசிகாந்த் செந்தில் எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களை சந்தித்த சசிகாந்த் செந்தில் பேசுகையில், ஒன்றிய பாஜ அரசு தொழிலாளர் நலன் மற்றும் மக்களின் நலன் குறித்து சிந்திக்காமல் இருக்கும் ஏகாதிபத்திய அரசு.

தற்போது நடைபெற்று வரும் நீட் மோசடிகள் அம்பலமான பிறகு அனைத்து மாநிலங்களும் நீட் மசோதா எதிர்ப்பை தமிழ்நாடு முன்னின்று தலைமை ஏற்க வேண்டும் என அழைப்பு விடுத்து வழியுறுத்தி வருகின்றது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தமிழ்நாடு நீட் வேண்டாம் எனக் கூறுவதற்கு காரணம் இது போன்ற மோசடிகள்தான். பாராளுமன்றத்தில் வலிமையான எதிர்க்கட்சி உள்ளதால் மக்களின் குரல் பலமாக ஒலிக்கும். இந்தியா என்றால் என்ன என்பது குறித்து பாஜ புரிந்து கொள்வதற்கான சாட்டையடிதான் அண்மையில் முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிய அரசு சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என நினைத்திருந்த பாஜ தற்போது இரண்டு மாநிலங்களில்தான் ஆட்சியில் உள்ளது. இனிமேலாவது பாஜவிற்கு புத்தி வருமா என்று பார்க்கலாம் என பேசினார்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்