கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பன்குப்பம் கிராமத்தில் டயர் தொழிற்சாலை கழிவுநீரால் விவசாயம் கடும் பாதிப்பு: மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பன்குப்பம் கிராமத்தில் டயர் உற்பத்தி தொழிற்சாலை கழிவுநீரால் விவசாயம் பாதிப்பு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சித்ராஜ் கண்டிகை ஊராட்சியில் பாப்பன்குப்பம், கோபால் ரெட்டி கண்டிகை, சிந்தலகுப்பம், போர்ரெட்டி கண்டிகை, சித்தராஜ் கண்டிகை உள்ளிட்ட 9 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பன்குப்பம் அருகே சிப்காட் தொழிற்சாலைகள் உள்ளது. இதில் கார்பன், ரசாயன தொழிற்சாலை, டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, இரும்பு உருக்கு ஆலைகள், காற்றாலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, மிளகாய் அரைக்கும் தொழிற்சாலை, ஐ பிரசர் ஹைட்ராலிக் பம்ப் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என 47க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

ஏற்கனவே மேற்கண்ட தொழிற்சாலைகளில் இருந்து கருப்பு துகள்கள், நச்சுப் புகை, கெமிக்கல் துர்நாற்றம் போன்றவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். வயிற்றுப்போக்கு, நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, என பல்வினை நோய்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக ஊராட்சி பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட துறையை அதிகாரிகளுக்கு பலமுறை நோட்டீஸ் கொடுத்து ஒரு சில நேரங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கெமிக்கல் காற்றில் வெளியேறும் துகள்கள் இரவு நேரங்களில் பரவுவது வாடிக்கையாக மாறியது. பாப்பன்குப்பம் பொதுமக்கள் மேற்கண்ட பல தொழிற்சாலை ஒட்டி விவசாயத்தை நம்பி பல ஏக்கரில் பயிரிட்டும் விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருந்து ரசாயன கழிவு நீர் விவசாயப் பகுதிக்குள் காம்பவுண்ட் சுவரை ஒட்டி வெளியேறுகிறது. இந்த கழிவுநீர் நெல் பயிர் செய்யப்பட்டுள்ள நிலத்தில் தேங்குவதால், நெற்பயிர்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வார்டு உறுப்பினர் ஜெய்கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கெமிக்கல் கழிவு நீர் வெளியேறியதால் விவசாயம் பாதித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிப்காட் பகுதியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாசுக்காட்டுப்பாடு அதிகாரிகள் விவசாய பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், விவசாய நிலத்தில் தேங்கியிருந்த கழிவுநீரை மாதிரிகளில் சேகரித்து ஆய்வகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், தொழிற்சாலையில் உள்ளே இருந்த கழிவுநீரின் மாதிரிகளையும் சேகரித்தனர். மேலும், ரசாயன கழிவுநீரை விவசாய பகுதியில் திறந்துவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்