கும்மிடிப்பூண்டி அருகே மாநெல்லூர் சிப்காட் தொழிற்பேட்டைக்கு ரூ.151 கோடியில் சாலை பணிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மாநெல்லூர் சிப்காட் தொழிற்பேட்டைக்கு ரூ.151 கோடியில் அமைக்கப்படும் சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை பணிகளை விரைவில் முடிக்க ஒப்பந்ததாரருக்கு அவர் உத்தரவிட்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர், சூரப்பூண்டி, சாணபூத்தூர் கிராம பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களைச் சுற்றி மாநெல்லூர் சிப்காட் தொழிற்பேட்டை அமைய 4,385 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 2,000 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆகும். தொழிற்பேட்டைக்கான பணிகள் முழுவீச்சுடன் தொடங்கி 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் மாநெல்லூர் சிப்காட்டில் மாசு இல்லாத வகையில் தொழிற்சாலைகள் வரவேண்டும் என ஏற்கனவே அரசுக்கு ஊராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மாநெல்லூர் சிப்காட்டில் இருந்து கவரப்பேட்டையில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் இரண்டு வழிச்சாலைப் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கவரப்பேட்டை – சத்தியவேடு- வாணியம்மல்லி கிராம வழியாக மாநெல்லூர் சிப்காட் சாலைக்கு நான்கு கட்டங்களாக ரூ.151 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகளில் முதற்கட்டமாக ரூ.54 கோடி செலவில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை பாதுகாப்பு பொறியாளர் செல்வகுமார் ஆய்வு செய்தார். அவருடன் உதவி கோட்ட பொறியாளர் ஆண்டி மற்றும் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது பாதுகாப்பு பொறியாளர் செல்வகுமார், ஏற்கனவே போடப்பட்டு வரும் சாலைகளின் தரத்தையும், பாதுகாப்பையும் ஒவ்வொரு இடமாகச் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சாலை போடுவதற்கு டெண்டர் விடப்பட்ட நபரை அழைத்து பாதுகாப்பு பொறியாளர் செல்வகுமார் பேசினார். மாநெல்லூர் சிப்காட் வளாகம் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எனவே சாலை பணியை இரவு பகலாக நடத்தி விரைந்து முடிக்கவும், சாலையில் செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் குறியீடு பலகைகளை வைத்து அதற்கு செக்யூரிட்டி அமைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். இந்த மாநெல்லூர் சிப்காட் தொடங்கப்பட்டால் சென்னை, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல இந்த சாலை பயனுள்ளதாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி