கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் இருவர் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இதேபோல், பூவிளம்பேடை சேர்ந்தவர் ராவணைய்யா. இவர்கள் இருவரும் கூட்டாக மர வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் ரமேஷ், ராவணைய்யா ஆகிய இருவரும் சின்னப்புலியூர் அருகே தொழில் சம்மந்தமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

யானைபாளையம் பகுதியில் காட்டு வழியாக சென்ற போது, மின்கம்பி உரசியதாக கூறப்படுகிது. தொடர்ந்து இருவர் மீதும் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் ராவணைய்யா உடல் கருகி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பலியானார். உயிருக்கு போராடி கொண்டிருந்த ரமேஷ், சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இப்பகுதியில் உயர் அழுத்த மின்வயர் தொங்கி இருப்பதால் அதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் குறித்து கவரைப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தின் மீது மின் வயர் உரசியதால் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்