கும்பகோணம் கொழுந்து வெற்றிலை!

சினிமா பாடல்களிலும் சரி! சொலவடைகளிலும் சரி! எதுகை மோனையாக கூறப்படும் கும்பகோணம் கொழுந்து வெற்றிலை அவ்வளவு ஃபேமஸ். தனித்துவம் மிகுந்த கும்பகோணம் கொழுந்து வெற்றிலை கும்பகோணத்தை ஒட்டி அமைந்துள்ள ஆவூர், கோவிந்தகுடி, வன்னியடி பகுதிகளில்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நன்னீரில் வளர்க்கப்படும் இந்த வெற்றிலைக் கொடிகளில் அறுசுவைகளும் நிறைந்திருக்கின்றன. இத்தகைய புகழ்பெற்ற கும்பகோணம் வெற்றிலை சாகுபடி குறித்து அறிய, வன்னியடி மற்றும் ராஜகிரி பகுதியில் சுமார் 15 ஏக்கரில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிலை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஷாஜகானைச் சந்தித்தோம். தொழிலாளர்களுடன் வெற்றிலைத் தோட்டத்தில் கவாத்துப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் நம்மை வரவேற்று வெற்றிலைக் கொடிக்காலை சுற்றிக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

“காவிரி பாய்ந்து ஓடுற எங்கள் ஊரில் விவசாயம் எப்போதும் சிறப்பாக இருக்கும். கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா, தற்போது நான் என்று வாழையடி வாழையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் நாட்டு வெள்ளை ரக வெற்றிலையை சாகுபடி செய்து வருகிறேன். இப்போது நான் மட்டுமே வெற்றிலைத் தோட்டத்தை கவனித்து வருகிறேன். தோட்டத்தில் இருப்பது அனைத்தும் 100 வருடங்களைக் கண்ட வெற்றிலைக் கொடிகள். ஒரு நூற்றாண்டைக் கடந்தும் எங்களுக்கு இன்றைக்கும் குறைவில்லாமல் மகசூல் தருவதற்கு காவிரி நீர்தான் காரணம். காவிரியில் விளையும் நெல்லுக்கு எப்படி ஒரு தனி மார்க்கெட் இருக்கிறதோ, அது போல வெற்றிலைக்கும் ஒரு தனி மார்க்கெட் இருக்கிறது.

அதனால்தான் காலம் கடந்து இன்றைக்கும் கும்பகோணம் வெற்றிலைக்கு இந்தளவு கிராக்கி இருக்கிறது. நாங்கள் இளம்பயிர், பதியம் பயிர், கட்டப்பயிர் என்று மூன்று வகைகளிலும் சாகுபடி செய்கிறோம். ஒவ்வொன்றிற்கும் தலா 5 ஏக்கர் ஒதுக்கி இருக்கிறோம். வெற்றிலைக்கான நாற்றுகளை எங்கள் தாத்தாக் காலத்தில் வாங்கியது. தற்போது வரை அதையே எடுத்து எடுத்து பதியம் போட்டு காய்ந்த கொடிகளுக்கு மாற்றாக பயிரிட்டும் வருகிறோம். வெற்றிலைச் சாகுபடிக்கு மண் மிகவும் முக்கியம். நாட்டு மாட்டு எருவை அடியுரமாக இட்டு வெற்றிலையை நடவு செய்துள்ளோம். அதனால இன்றைக்கும் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாக நிலத்தில் அதிகரித்தபடி இருக்கிறது. மற்ற இடங்களில் 5 நாட்களுக்கு ஒருமுறை நாற்றுகளுக்கு தண்ணீர் விடுவார்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவோம்.

மழை இல்லாத காலங்களில் நிலத்தில் மாட்டு எருவைக் கொட்டுவோம். இந்தத் தருணத்தில் மண்புழுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். நிலம் வளமாக மாறும். புழுக்களின் எச்சங்களே தற்போதும் வெற்றிலைக் கொடிகளுக்கு உரமாக பயன்படுகிறது. முதலில் நிலத்தில் வெற்றிலை படர்ந்து வளர்வதற்காக அகத்தியை நடவு செய்வோம். நடவு செய்த அகத்திச்செடிகள் 60 நாட்களில் இரண்டைரை அடிக்கும் மேல் வளர்ந்து விடும். இந்தத் தருணத்தில் பதியம் போட்டு வைத்திருந்த வெற்றிலைக் கொடிகளை எடுத்து காய்ந்த வெற்றிலைக் கொடிக்கு மாற்றாக பயிரிடுவோம். அகத்தியை நடவு செய்வதற்கு முன்பு மண் முழுவதையும் கட்டி இல்லாமல் பொலபொலப்பாக இருக்கும்படி ஆக்கிவிடுவோம். அதன்பிறகே நடவு செய்வோம். இந்த நடவு முறையால் அகத்தியோடு சேர்ந்து வளரும் வெற்றிலையும் நன்கு வேர்பிடித்து வளரும்.

அகத்திக்கீரையை 8 மாதத்தில் அறுவடை செய்து விற்பனை செய்துவிடுவோம். வெற்றிலைக்கு சாரத்தால் தட்டி போல் கட்டிவிடுவோம். இதில் வெற்றிலை படர்ந்து வளரத் தொடங்கும். ஆரம்ப காலகட்டத்தில் வெற்றிலையில் எந்தவொரு பூச்சித் தாக்குதலும் இருந்தது இல்லை. ஆனால் தற்போது வெற்றிலையில் வங்கு சுருட்டுப் பூச்சி தாக்குதல் அவ்வப்போது வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வேளாண் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று அவர்கள் பரிந்துரைக்கும் மருந்தினைத் தெளிக்கிறோம். வெற்றிலைக் கொடிகள் கொடிக்காலில் படர்ந்து வளர்ந்து தரமான வெற்றிலைகளாக கிடைப்பதற்கு 11 மாதம் வரை ஆகும். நாங்கள் சரியான வளர்ச்சிக்காலமான ஓராண்டுக்குப் பின் வெற்றிலைகளைப் பறிக்கத் தொடங்குவோம். மூன்று ஆண்டுகள் வரை 20 முதல் 40 நாட்களுக்கு ஒருமுறை வெற்றிலையைப் பறித்துக் கொண்டே இருப்போம். வெற்றிலையின் சாகுபடி குறையும்போதோ அல்லது வெற்றிலைக் கொடிகள் காயும்போதோ நாங்கள் பதியம்போட்டு வைத்திருக்கும் புதிய கொடிகளை நடவு செய்வோம்.

வெற்றிலையை இருபது நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்வோம். அப்படி அறுவடை செய்யும் வெற்றிலைகளை நாங்கள் கிலோ கணக்கில் விற்பனை செய்யாமல் கவுளி கணக்கில் மட்டும் விற்பனை செய்கிறோம். ஒரு கவுளியில் 100 வெற்றிலை இருக்கும் அளவிற்கு கட்டு இருக்கும். இந்த நூறு வெற்றிலையும் ரூ.35க்கு விற்பனை செய்கிறோம். இதுவே எங்களைத் தேடி வந்து வெற்றிலையை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவுளி வெற்றிலையை ரூ.30 என்ற கணக்கில் கொடுத்துவருகிறோம். எங்களுக்கு ஒரு ஏக்கர் வெற்றிலைத் தோட்டதில் இருந்து இருபது நாட்களுக்கு ஒருமுறை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. இது 15 ஏக்கருக்கும் கணக்கு செய்ய முடியாது. பதியம், கட்டப் பயிர், இளம் வெற்றிலை என்று ஒவ்வொன்றிற்கும் மாறுபடும். அப்படிப் பார்க்கையில் வெற்றிலையில் ஒரு மாதத்திற்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவுகள், வேலையாட்களின் ஊதியம் என ரூ.1 லட்சம் போக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது.

வெற்றிலையை கும்பகோணம், தஞ்சை, நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறேன். வெற்றிலையைக் ட்டுவதற்கு வாழை இலைகளை மட்டுமே பயன்படுத்துகிறேன். இதன்மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வெற்றிலை அடிபடாமல் இருப்பதோடு, காய்ந்து போகாமலும் இருக்கும். முகூர்த்த நாட்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் பல்வேறு விசேஷ நாட்களில் வெற்றிலை அதிகம் விற்பனை ஆகும். சொந்தமாக வெற்றிலைக் கடையும் வைத்து விற்பனை செய்கிறேன். வெற்றிலையைப் பொருத்தவரையில் ஒன்றரை வருடம் வரை பறித்து விற்பனை செய்வோம். அடுத்த 10 மாதத்திற்கு பறிக்காமல் பராமரிப்புப் பணிகளை மட்டுமே மேற்கொள்வோம். வெற்றிலைக் கொடிகளில் கார்த்திகை மாதத்தில் கவாத்து பணி மேற்கொள்வோம். இந்தத் தருணத்தில் தேவையற்ற காய்ந்த சருகுகளை அகற்றுதல், களை எடுத்தல் போன்ற பணிகளை செய்வோம். இதுபோக 3 ஏக்கர் வெற்றிலைத் தோட்டத்தில் ஊடுபயிராக வாழையையும் சாகுபடி செய்திருக்கிறேன். ஒரு ஏக்கருக்கு 900 வாழை மரங்களை நடவு செய்திருக்கிறேன். ஒரு வாழைமரத்திற்கும் மற்றொரு வாழை மரத்திற்கும் இடையில் தலா 50 அடி இடைவெளிவிட்டு நடவு செய்திருக்கிறேன். வாழையில் ஒரு ஏக்கரில் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவுகள் ரூ.50 ஆயிரம் போக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் லாபமாக கிடைக்கிறது’’ என்கிறார்.

தொடர்புக்கு:
ஷாஜகான்: 94431 14299.

வெற்றிலைக் கொடி பராமரிப்பு

வெற்றிலைக் கொடிக்காலில் செய்யப்படும் சில பராமரிப்பு பணிகள் குறித்து கூறிய ஷாஜகான், “கொடிக்காலில் தண்ணீர் அதிகம் நிற்கக்கூடாது. அதேபோல் அதிகம் உரமும் தெளிக்க மாட்டோம். நோய்த் தாக்குதலோ அல்லது பூச்சி தாக்குதலோ இருந்தால் மட்டும் வேப்பம் புண்ணாக்கைக் கலந்து செடி களில் தெளிப்போம். காட்டுக் கருவை, கல்யாண முருங்கை, உதகை மரத்தில் குடையப்பட்ட பட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி தண்ணீர் இறைத்து வெற்றிலைச் செடிகள் மீது ஊற்றுவோம். தற்போது இந்தப் பட்டை பிளாஸ்டிக்கில் வந்தாலும் அதை நாங்கள் உபயோகப்படுத்துவதில்லை’’ என்கிறார்.

 

Related posts

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்