குமரி சந்தியா தேவிக்கு சிறந்த திருநங்கை விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: 2024ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி, பூ கட்டும் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு புராணக் கதைகளை படித்து தன் தனித் திறமையால் 1000க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தியுள்ளார். வில்லிசை நிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு, சமூக நலத்திட்டங்கள், வரதட்சணை தடுப்பு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

பல திருநங்கைகளுக்கு அவர்கள் சுயமாக வருமானம் ஈட்டும் வகையில் வில்லிசையை கற்றுக் கொடுத்து கிராமிய கலைகளில் ஈடுபட உதவி வருகிறார். தோவாளையைச் சார்ந்த 9ம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழை சிறுவனின் படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதோடு, 8 வயது மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை தத்தெடுத்து பராமரித்து வருகிறார். இவ்வாறு திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்து, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக வில்லிசையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு 2024ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

அவரது சேவையைப் பாராட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருநங்கை சந்தியா தேவிக்கு, சிறந்த திருநங்கை விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நல ஆணையர் அமுதவல்லி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இணைச் செயலாளர் வளர்மதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்