Thursday, June 27, 2024
Home » குமரிமுனையில் கடல் சார் பாதசாரிகள் பாலம்.. மு.க.ஸ்டாலின் தலைமையில் உலகத் தரத்தில் உயரும் நெடுஞ்சாலைத் துறையின் சாலைகள்!!

குமரிமுனையில் கடல் சார் பாதசாரிகள் பாலம்.. மு.க.ஸ்டாலின் தலைமையில் உலகத் தரத்தில் உயரும் நெடுஞ்சாலைத் துறையின் சாலைகள்!!

by Lavanya

சென்னை: குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் கடல் சார் பாதசாரிகள் பாலம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியப் பொருளாதாரத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் சிறந்து விளங்குகிறது என்றால், அதற்கு காரணம் தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பு வசதிகள் பெருகியுள்ளது என்பதுதான்.1971-ஆம் ஆண்டில், கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் இணைப்புச் சாலை திட்டத்தை அறிமுகப்படுத்தி தமிழ்நாடு முழுவதிலும் குக்கிராமங்களை எல்லாம் நகரங்களோடு இணைத்து சாலை வசதிகளை மேம்படுத்தினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அதன் காரணமாக 2010-ல் இந்தியாவில் ஒவ்வொரு 100 சதுர கி.மீ. நிலப்பரப்பிலும் சராசரியாக 103 கி.மீ. நீளத்துக்குச் சாலைகள் அமைந்துள்ள போதிலும், தமிழ்நாட்டில் சராசரியாக 153 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைந்து சாலை வசதிகளில் தமிழ்நாடு மிகச் சிறந்த மாநிலம் எனப் புகழ் வளர்த்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், தமிழ்நாட்டின் சாலை வசதிகளைப் பெருக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம்

நான்கு வழிச் சாலைகளாக அகலப்படுத்துதல்:

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் 2021-2022ம் ஆண்டின் மானிய கோரிக்கையின் போது, “முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத்திட்டம்” அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தின்கீழ் மாவட்ட மற்றும் தாலுகா தலைமையகங்களை இணைக்கும் முக்கியமான மாநில நெடுஞ்சாலைகளில் 2,200 கிமீ நீளச் சாலைகள் நான்கு வழிச்சாலைகளாகப் படிப்படியாக அகலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முதன்மைத் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.4,984கோடி மதிப்பில் 577 கி.மீ. சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்துவதற்கு எடுத்துக் கொள்ளபட்டு, ரூ.2,608 கோடி செலவில் 215 கி.மீ. நீளச் சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மேம்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

இருவழிச் சாலையாக அகலப்படுத்துதல்:

இந்த முதன்மைத் திட்டத்தின் கீழ், ரூ.2465 கோடி மதிப்பில் 1710 கி.மீ. சாலைகள் இருவழிச்சாலைகளாக மாற்ற பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.1860 கோடி செலவில் 1407 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

நகர்ப்புற மேம்பாட்டுப்பணி:

நகர்புறப் பகுதிகளில் விரைவான போக்குவரத்தை ஏற்படுத்தி வணிகப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளவும். வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.815 கோடி மதிப்பில் 171 கி.மீ. நீளச் சாலைப் பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.579 கோடி செலவில் 132 கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக மாற்றும் பணி:

2021-2022 மானிய கோரிக்கையின் போது “தற்போதுள்ள 1281 தரைப்பாலங்களுக்கு பதிலாக, 2026 ஆம் ஆண்டிற்குள் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்” என முதலமைச்சர் அனைத்துக் காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து என்ற திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது. மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்குவதால் போக்குவரத்து சில தடங்களில் பாதிக்கப்பட்டு கிராமங்களில் உள்ள சாலைகள் துண்டிக்கப்படுகின்றன. மக்களின் அன்றாட
நடவடிக்கைகள், சரக்கு போக்குவரத்து, விளை பொருள்களை சந்தைப்படுத்துதல். மாணவர்கள் பள்ளி செல்வது போன்றவற்றில் உள்ள இடையூறுகளைத் தடுக்க கடந்த மூன்று ஆண்டுகளாக, இத்திட்டத்தின் கீழ், ரூ. 2,006 கோடி மதிப்பில் 1113 தரைப்பாலங்கள் எடுக்கப்பட்டு. ரூ.785 கோடி செலவில் 795 உயர்மட்ட
பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

சாலை ஓடுதளப்பாதை மேம்பாட்டுத் திட்டம்:

சீரான போக்குவரத்தை மேம்படுத்த மற்றும் சாலையின் மேற்பரப்பு வலுவுடன் இருக்க, கடந்த மூன்று ஆண்டுகளாக, இத்திட்டத்தின் கீழ், ரூ. 1,610 கோடி மதிப்பில் 4581 கி.மீ. நீளத்திற்கு பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.1,353 கோடி செலவில் 4492 கி.மீ. நீள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

சாலை பாதுகாப்பு:

இத்திட்டத்தின் கீழ், ரூ.676 கோடி மதிப்பில் 1653 பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.352 கோடி செலவில் 1,130 சாலை பாதுகாப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

புறவழிச்சாலைகள் அமைத்தல்:

புறவழிச்சாலைகள், போக்குவரத்துகள் தங்கு தடையில்லாமல் செல்வதை உறுதி செய்வதுடன் நகர்ப்புறப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் பயன்படுகின்றன. மேலும், வாகன இயக்கச் செலவைக் குறைக்கவும் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கவும் புறவழிச்சாலைகள் பயன்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், 109 புறவழிச்சாலை பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில், 18 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம், அரக்கோணம்- இராணிபேட்டை மாவட்டம், அருப்புக்கோட்டை மேற்கு புறவழிச்சாலை- விருதுநகர் மாவட்டம், பவானி (பாகம்-1) ஈரோடு மாவட்டம் முதலிய 21 புறவழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள புறவழிச்சாலைகளில், 27 பணிகள் நில எடுப்பு நிலையிலும், 38 பணிகள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையிலும் உள்ளன.

உயர்மட்ட சாலை மேம்பாலம்:

நகரங்களில் அதிகரித்துவரும் போக்குவரத்து மற்றும் சாலைகளை அகலப்படுத்துவதற்குப் போதுமான இடம் இல்லாததால் உயர்மட்ட மேம்பாலங்கள் தேவைப்படுகின்றன. சாலை சென்னை அண்ணா சாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல்களால் நிலவும் காலதாமதங்களைத் தவிர்க்கவும் சீரான போக்குவரத்துகள் நடைபெறவும் உதவும் வகையில் ரூ.621 கோடி செலவில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சாலை மேம்பாலம்:

நீண்ட காலம் நிலுவையில் இருந்த மதுரை மக்களின் கோரிக்கையான மதுரை மாநகரில் இராஜாஜி அரசு மருத்துவமனை சந்திப்பு மற்றும் அப்போலோ மருத்துவமனை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி 2011ல் தொடங்கி எவ்விதமான முன்னேற்றமின்றி இருந்தது. 2023-24 ஆம் ஆண்டு இப்பணிகளுக்கான அரசாணை வழங்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இரயில்வே மேம்பாலங்கள்:

இரயில்வே மேம்பாலங்கள் சாலை போக்குவரத்து பாதுகாப்பின் முக்கிய அம்சமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றபோது 70 இரயில்வே மேம்பாலப் பணிகள் பல்வேறு நிலையில் நடைபெற்று வந்தன. இதுவரை மூன்றாண்டுகளில் 836 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22 இரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. இரயில் கடவுகள் மூடப்பட்டுள்ளன. மாநில நிதியின் மூலம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சிக்கண்ணா கல்லூரி (திருப்பூர் மாவட்டம்) அருகே இரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. மேலும் பன்னாட்டு நிதி உதவியுடன் நடைபெறும் திட்டங்களில் உள்ள சாலை மற்றும் புறவழிச்சாலைகளில் 12 இரயில்வே மேம்பாலங்களும் நடைபெற்று வருகின்றன. இவைதவிர அருப்புக்கோட்டை, சிவகங்கை, சங்கரன்கோவில், திண்டுக்கல் நாமக்கல் ஆகிய புறவழிச்சாலைப்பணிகளில் குறுக்கே இரயில்வே பாதையில் பாலம் கட்ட இரயில்வே துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நம்ம சாலை செயலி:

“விபத்தில்லா மாநிலம்” என்ற மாண்புமிகு முதலமைச்சர் கனவை செயல்படுத்த, “பள்ளங்கள் அற்ற சாலை” என்ற இலக்கை எய்திடவும் பொது மக்களின் துணையோடு கண்டறியப்பட்ட சாலை பள்ளங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரி செய்திடவும் நம்ம சாலை கைபேசி செயலி ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் சாலை பள்ளங்கள் சம்பந்தப்பட்ட களப்பொறியாளர்களுக்கு உடனுக்குடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். அதன் அடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை சாலையில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரத்திலும் மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் 72 மணி நேரத்திலும் சரி செய்யப்படும். மேலும் சரி செய்யப்பட்ட புகைப்படம் உடனுக்குடன் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்து புகார் தந்தவர்க்கு தெரிவிக்கப்படும். நம்ம சாலை செயலி மூலமாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, இச்செயலி பொதுமக்களின் பயன்பாட்டுக்காகப் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சரின் “பள்ளமில்லா சாலை பாதுகாப்பான பயணம்” என்ற எண்ணம் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை மூலமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் 2,129 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன.

மரக்கன்றுகள் நடுதல்:

பசுமைப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்தும் அரசின் நோக்கத்திற்கு ஏற்ப, நெடுஞ்சாலைத் துறை சாலைப் பயனாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் பசுமையான சாலைகளை வழங்குகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடுத்த 10 ஆண்டுகளில் பலவகையான நாட்டு மரங்களை நடும் வகையில் மாபெரும் மரம் நடும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நடத்த திட்டமிடப்பட்டது. 2023-24ம் ஆண்டில், 4,50.000 மரங்கள் நடப்பட்டுள்ளன தமிழகம் முழுவதும், நெடுஞ்சாலைகளில் உள்ள மையத்தடுப்பான்களில் எதிர்வரும் வாகனங்களின் ஒளியால் வாகன ஓட்டுநருக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க, இதுவரை, 2023-24ம் ஆண்டில், 2,50,000 செடிகள் நடப்பட்டுள்ளன.

நிரந்தர வெள்ள சீரமைப்புப் பணிகள் – மிக்ஜாம் புயல் நிவாரணம்:

2023-24 ஆம் ஆண்டில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் வெள்ள நிரந்தர மறுசீரமைப்பின் கீழ், 14744 மீ வடிகால் பணி, 9 மதகுகள் மற்றும் 1,28,266 மீ நீளமுள்ள வண்டல் நீர்பிடிப்பு குழிகள் உட்பட 46 பணிகள் ரூ.106 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளன. இதில், 14,329 மீ வடிகால், 7 மதகுகள் மற்றும் 60,710 மீ நீளமுள்ள வண்டல் நீர்பிடிப்பு குழிகள் ரூ.49 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. டாக்டர் வி. திருப்புகழ் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 13 பணிகள் ரூ. 92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கில் முக்கியமான பணிகள் முன்னுரிமை அடிப்படையில் முடிக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழையால், வரலாறு காணாத கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகள் மற்றும் மதகுகள் சேதமடைந்தன. ஒரு வாரமாக மழைநீர் சில மீட்டர் உயரத்திற்கு தேங்கி நின்றதால் சாலைகள் மற்றும் பாலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தாமிரபரணி படுகையில் உள்ள பல பெரிய குளங்கள் உடைந்தன. போர்க்கால அடிப்படையில் இரவும் பகலும் தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அயராத முயற்சியால், சாதனை நேரத்தில் போக்குவரத்து சீரானது. 2023-24 ஆம் ஆண்டில், ரூ.185 கோடி செலவில் தற்காலிக சீரமைப்புப் பணிகளும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ரூ.227 கோடி செலவில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், மதகுகள்/சாலைகள், வடிகால்/ மையத்தடுப்பான் ஆகியவற்றை நிரந்தரமாகச் சீரமைக்கும் பணிகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜல்லிகட்டு அரங்கம்:

குட்டிமேய்க்கிபட்டி அதகரைப்பாலம் சாலையிலிருந்து (மாவட்ட இதரச்சாலை) ஜல்லிக்கட்டு அரங்கம் வரை 3.30 கி.மீ நீளத்திற்கு ஒருவழிப் பாதையில் இருந்து கடின புருவங்களுடன் கூடிய இருவழிப் பாதையாக மாற்றும் பணிகள் 4 மாதங்களில் முடிக்கப்பட்டு. இச்சாலை முதலமைச்சர் அவர்களால் 24.1.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

குமரிமுனையில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் கடல் சார் பாதசாரிகள் பாலம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டங்களில் ஒன்றான குமரிமுனையில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும். விவேகானந்தர் நினைவுப்பாறையையும் இணைக்கும் கடல்சார் பாதசாரிகள்பாலம் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி விரைவில்
முடிவடைந்து திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது. நீர் நிலைகள், குறிப்பாக ஆறுகளின் குறுக்கே கடந்த மூன்றாண்டுகளில் 277 உயர்மட்டப் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2023-24ஆம் ஆண்டில் 13 உயர்மட்டப் பாலங்கள் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு பல்வேறு பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. இப்படி, நெடுஞ்சாலைத் துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் சாலை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. ரூ.4,984 கோடியில் 577 கி.மீ. சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்படுகிறது! ரூ.2,465 கோடி மதிப்பில் 1710 கி.மீ. சாலைகள் இருவழிச் சாலைகளாகின்றன! ரூ.1,610 கோடியில் 4,581 கி.மீ. நீளச் சாலை ஓடுதளப்பாதையாகிறது! 1,281 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக உயர்த்தப்படுகின்றன”. இப்பணிகளின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதிலும் சாலைப் பயணம் இனிமையானதாக எளிமையானதாக அமைய பல்வேறு முன்னேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி சாலை வசதிகளில் தமிழ்நாடு முதலிடம் என்பதை நிலைநாட்டி வருகிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

6 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi