குமரி அருகே மனைவி கண் எதிரில் பயங்கரம்: இளைஞர் காங். நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த பாரதப்பள்ளி அருகே உள்ள குன்னத்துவிளையை சேர்ந்தவர் ஜாக்சன் (37). இவர் சொந்தமாக டெம்போ வைத்து தொழில் செய்து வந்தார். திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். அவரது மனைவி உஷாகுமாரி (36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். உஷாகுமாரி, திருவட்டார் பேரூராட்சி 10 வது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலராக உள்ளார்.

ஜாக்சனுக்கும், சிதறால் அடுத்த வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்ற விலாங்கன் (31) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ராஜகுமார், அவருடன் வந்தவர்கள் ஜாக்சனின் காரை அடித்து நொறுக்கி, அவரையும் தாக்கினர். இது தொடர்பாக ஏற்கனவே திருவட்டார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தன் மீது போலீசில் புகார் அளித்ததால், ஜாக்சன் மீது ராஜகுமார் கடும் ஆத்திரத்தில் இருந்தார். அவ்வப்போது ஜாக்சனிடம் வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ஜாக்சன், கடை வீதிக்கு சென்று இருந்தார். பாரதப்பள்ளி ஆர்.சி. தேவாலயம் முன் அவர் நின்று கொண்டிருந்த போது ராஜகுமார், அவருடன் சேர்ந்து 5 பேர் கொண்ட கும்பல் 2 பைக்குகளில் வந்தனர். ஜாக்சனை செல்ல விடாமல் வழி மறித்தவர்கள் எங்களுடன் நீ மோதுகிறாயா? என்று கேட்டு அவருடன் தகராறு செய்தனர். அப்போது ராஜகுமார் தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் ஜாக்சனை சரமாரியாக வெட்டினார். இதில் இருந்து உயிர் தப்ப ஓட முயன்ற ஜாக்சனை, ராஜகுமார் மற்றும் அவருடன் வந்திருந்த கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கம்பியாலும் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜாக்சன் சரிந்து விழுந்தார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் தான் ஜாக்சனின் வீடு உள்ளது. அவரது மனைவி உஷாகுமாரியும் வந்தார். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் ராஜகுமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜாக்சனை மீட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவல் அறிந்ததும் திருவட்டார் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த ஜாக்சன், இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதை அறிந்ததும் உஷாகுமாரி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக உஷாகுமாரி அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் ராஜகுமார் மற்றும் கண்டால் தெரியும் 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களை பிடிக்க தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related posts

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும்: நடிகர் சங்கத் தலைவர் நாசர்

மகாவிஷ்ணு கைது விவகாரத்தில் சட்டம் கடமையை செய்துள்ளது: செல்வபெருந்தகை பேட்டி

மூடநம்பிக்கை செயல்கள் பள்ளிகளில் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்