குமரியில் சூரிய அஸ்தமனத்தை பார்க்க கவர்னர் குடும்பத்தினருக்காக சுற்றுலா பயணிகளுக்கு தடை: சுசீந்திரம் கோயிலிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

கன்னியாகுமரி: கவர்னர் குடும்பத்தினர் கன்னியாகுமரியை சுற்றிபார்க்க வேண்டி அங்கிருந்த சுற்றுலா பயணிகளை சன்செட் பாயின்ட் உள்ளிட்ட இடங்களுக்கு போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதேபோல், சுசீந்திரம் கோயிலில் கவர்னர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ததால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் மதியம் கன்னியாகுமரி வந்தார். மாலையில் குடும்பத்தினருடன் தனி படகில் திருவள்ளுவர் சிலைக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் படகு மூலம் விவேகானந்தர் நினைவிடம் சென்று தியானம் செய்தார். மாலையில் சன்செட் பாயின்ட் சென்று சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதாக இருந்தது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல் பேரிகார்டுகளை வைத்து போலீசார் ஆங்காங்கே அடைத்தனர். அப்பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. ஆனால், கவர்னர் சன்செட் பாயின்ட் வரவில்லை. அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சூரிய அஸ்தமனம் காண கடற்கரை பகுதிக்கு வந்தனர்.

இதுதொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘கவர்னரின் உறவினர்கள்தான் வந்தனர். அதற்கே இந்த அளவு போலீசாரின் கெடுபிடி நடப்பது ஏன் என்று எங்களுக்கு தெரியவில்லை’ என வேதனை தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் திரிவேணி சங்கமம் பகுதியில் உலா வந்த கவர்னர் பின்னர் காலை 8 மணியளவில் குடும்பத்தினருடன் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். ஒரு மணி நேரம் கோயில் உள்பிரகாரங்களை சுற்றி வந்து, காலை 9 மணியளவில் கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றார். இதனால் 8 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் யாரையும் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கவில்லை.

Related posts

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சி!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!