குமரியில் கன்னிப்பூ அறுவடை பணி தீவிரம்: நெல்லிற்கு நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாகர்கோவில்: குமரியில் கன்னிப்பூ அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. நெல்லுக்கு நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என்று இருபோக சாகுபடி நடந்து வருகிறது. கன்னிப்பூ சாகுபடி கடந்த ஜூன் மாதம் மாவட்டத்தில் நடந்தது. தோவாளை சானலில் உடைப்பு காரணமாக சானலை நம்பி இருந்த விவசாய நிலங்களில் சாகுபடி பணி நடக்கவில்லை. பறக்கை, தேரூர், சுசீந்திரம் குளங்களை நம்பி இருந்த வயல்களில் முதலில் சாகுபடி பணி நடந்ததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறுவடை பணி தொடங்கி முடிந்தது. தற்போது கும்பபூ சாகுபடிக்காக நாற்றங்கால் தாயரித்து உள்ளனர். இதனை தவிர மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், அறுவடை பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 5 நாட்களாக வெயில் அடித்து வருவதால், விவசாயிகள் அறுவடை பணியை தொடங்கி உள்ளனர். அறுவடை செய்யப்படும் நெல்லிற்கு வெளி மார்க்கெட்டிலும், கொள்முதல் நிலையங்களிலும் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் வைக்கோலுக்கு போதிய விலை இல்லாதால், விவசாயிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். இது குறித்து முன்னோடி விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: பறக்கை, சுசீந்திரம், தேரூர் பகுதியில் அறுவடை முடிந்த நிலையில் தற்போது கடந்த ஒரு வாரகாலமாக மாவட்டத்தில் மற்ற பகுதிகளில அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் கன்னிப் பூ பருவத்தின் போது அம்மை 16 ரகமும், கும்பபூ பருவத்தின் போது பொன்மணி ரகமும் சாகுபடி செய்து வருகின்றனர். இதனை தவிர திருப்பதிசாரம் 3, 5 ரகமும், பாரம்பரய ரகங்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கன்னிப்பூ அறுவடை செய்யப்படும் நெல் வெளி மார்க்கெட்டில் ஒரு கோட்டைக்கு ரூ.1800 முதல் ரூ.1950க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை தவிர அரசு திறந்துள்ள கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டால் நெல் சன்னரகத்திற்கு ரூ.2450ம், மோட்ட ரகத்திற்கு ரூ.2405ம் என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நெல்லிற்கு நல்ல விலை இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த கன்னிப்பூ மகசூல் என்பது குறைவாகவே உள்ளது. இதுபோல் வைக்கோலுக்கும் போதிய விலை கிடைக்கவில்லை. ஒரு ஏக்கர் வயல்களில் கிடைக்கும் வைக்கோலுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரத்திற்கு விலைபோகிறது. தற்போது அறுவடை தீவிரம் அடைந்துள்ளதால், அறுவடை எந்திரத்திற்கு பல்வேறு வகையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சங்கிலி அறுவடை எந்திரத்திற்கு ஒரு மணிக்கூர் அறுவடை செய்வதற்கு வாடகையாக ரூ.2200 முதல் ரூ.2500ம், டயர் அறுவடை எந்திரத்திற்கு ஒரு மணிக்கூர் அறுவடை செய்வதற்கு ரூ.1500ம் வாடகையாக வசூல் செய்யப்படுகிறது. என்றார்.

Related posts

45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை: பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை