தென்னை சாகுபடியில் கலக்கும் குமரி விவசாயி!

பொள்ளாச்சி போல குமரி மாவட்டத்திலும் தென்னை சாகுபடி பரவலாக நடந்துவருகிறது. இங்கு சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி படுஜோராக நடந்துவருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள பகுதி என்பதால் இங்கு குளிர்ந்த சீதோஷ்ணநிலை இருக்கும். இதனால் காய்கள் தடிமனாக இருக்கும். இங்கு உற்பத்தியாகும் தேங்காயில் எண்ணெய்ச் சத்தும் அதிகமாக இருக்கும். இதனால் பல விவசாயிகள் தொடர்ச்சியாக தென்னை சாகு படியில் ஈடுபடுகிறார்கள். அந்த வரிசையில் 40 வருடமாக தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வரும் குமரி மாவட்டம் ராஜாவூர்ராமசமுத்திரகுளம் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜார்ஜ் என்பவரைச் சந்தித்தோம்.“எனக்குச் சொந்தமாக 3.5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 300 தென்னை மரங்கள் வைத்திருக்கிறேன். நெட்டை குட்டை மற்றும் நாட்டுரக தென்னை மரங்கள்தான் இவை. நெட்டை குட்டை ரகம் 5 வருடத்தில் காய்க்கத் தொடங்கும். நாட்டு ரகம் 7 வருடத்திற்குப் பிறகே மகசூல் கொடுக்கும். எனது தோட்டத்தில் இருக்கும் தென்னையில் பெரும்பாலானவை 40 வருட வயதுடையவை. தென்னங்கன்றுகளை 40 வருடத்திற்கு முன்பு நடவு செய்தேன். கரிசல் மண் பூமி என்பதால் தென்னங்கன்றுகளை நடவு செய்த 1 மாதத்தில் நல்ல வேர் பிடித்து வளரத்தொடங்கிவிட்டது. ஒரு தென்னை மரத்திற்கும் மற்றொரு தென்னை மரத்திற்கும் இடையில் 20 அடி இடைவெளி இருக்கும். நான் ஒரு ஏக்கருக்கு 80 லிருந்து 90 என்ற கணக்கில்தான் மரங்களை நடவு செய்தேன்.

நல்ல இடைவெளி விட்டு நடவு செய்தால் மட்டுமே நல்ல மகசூல் பெற முடியும். இதைத்தான் தேர் ஓட தென்னை என நமது முன்னோர் கூறி வைத்திருக்கிறார்கள். நடவுக்கு முன்பு அடியுரமாக தொழு உரத்தையும் மாட்டுச்சாணத்தை மட்டுமே பயன்படுத்தினேன். பின்பு காலம் மாற மாற டிஏபி, பொட்டாசியம் போன்ற உரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினேன். தற்போது மீண்டும் இயற்கை முறையில் விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறேன். கன்றுகள் நடவு செய்த 4 வருடத்தில் இருந்துதான் எனக்கு மகசூல் கிடைக்கத் துவங்கியது. வயது அதிகம் உடைய மரங்கள் என்பதால் எனது தோட்டத்தில் உள்ள அனைத்து தென்னைகளும் நல்ல மகசூல் கொடுத்துவருகின்றன. குமரி மாவட்டத்தில் கேரள வாடல் நோய்த் தாக்குதல் அதிகமாக இருக்கும். ஆனால் ராஜாவூர் சுற்றுவட்டாரத்தில் கேரள வாடல் நோய் பரவல் குறைவாக இருக்கிறது. இதுபோல் வெள்ளைப் பூச்சி தாக்குதலும் இந்த மாவட்டத்தில் அதிகம். வெள்ளைப் பூச்சி தாக்குதல் உள்ள தென்னையில் போதிய அளவு பச்சையம் இல்லாமல் மகசூல் அடியோடு பாதித்து விடும். எனது தோட்டத்தில் வெள்ளைப் பூச்சி தாக்குதல் குறைவு. நோய்த் தாக்குதலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததே காரணம் என வேளாண்மை அதிகாரிகள் கூறுகிறார்கள். தென்னை மரங்களுக்கு போதிய ஊட்டச்சத்து உரங்களை நாம் பயன்படுத்தி வந்தால், நோய்த் தாக்குதல் குறைவாகவே இருக்கும் என்பதை எனது தோட்டத்தில் கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஊட்டச்சத்துக்காக நான் வருடத்திற்கு ஒருமுறை மாட்டுச்சாணம், சாம்பல், அதனுடன் பொட்டாஷ், டிஏபி, யூரியா, ஜிப்சம் ஆகியவற்றை தென்னை களுக்கு உரமாக வைத்து வருகிறேன். இந்த உரங்களை ஜூன் மாதங்களில் மரத்தைச் சுற்றி பள்ளம் தோண்டி கொட்டி மூடிவிடுவேன். பின்னர் அந்த தென்னைக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இப்படி ஒரு வருடத்திற்கு ஒருமுறை உரம் வைக்கும்போது மரங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்வதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியுடனும் வளரும். குமரி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் அணையில் இருந்து நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். தோவாளை சானலில் தண்ணீர் வரும்போது, எனது தோட்டத்திற்கு தண்ணீர் வரும். இதுபோக ராமசமுத்திரக்குளத்தில் இருந்தும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். குமரி மாவட்டத்தில் இரு பருவமழையும் பெய்வதால், தண்ணீருக்கு தட்டுப்பாடு வருவதில்லை. வருடத்திற்கு ஒருமுறை தோட்டத்தில் உள்ள களைகளை அப்புறப்படுத்தும் வகையில் உழவுப் பணிகளை மேற்கொள்வேன். எனது தோட்டத்தில் கடந்த காலங்களில் வண்டுத் தாக்குதல் மட்டுமே இருந்தது. தற்போது வெள்ளை ஈ தாக்குதல் இருக்கிறது. இந்த வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து மரங்களை ஆய்வு செய்து உரிய மருந்து கொடுக்கிறார்கள்.

தென்னையில் இருந்து வருடத்திற்கு 6 முறை மகசூல் கிடைக்கும். ஒரு முறை தேங்காய் வெட்டும்போது ஒரு ஏக்கருக்கு 650 கிலோ தேங்காய் கிடைக்கும். தேங்காயைப் பொருத்தவரையில் சரியான விலையைச் சொல்ல முடியாது. மகசூலைப் பொருத்து விலையில் மாற்றம் இருக்கும். ஒரு கிலோ தேங்காய் ரூ.18 லிருந்து ரூ.30 வரை விற்பனையாகிறது. நாங்கள் ஒரு கிலோ தேங்காயை சரா சரியாக ரூ.25க்கு விற்பனை செய்கிறோம். மூன்று ஏக்கருக்கு சேர்த்து மொத்தம் 1950 கிலோ தேங்காய் கிடைக்கிறது. இதன்மூலம் வருடத்திற்கு ரூ.2.9 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் உரம், தேங்காய் வெட்டுதல் மற்றும் வேலை ஆட்கள் கூலி என ரூ.90 ஆயிரம் போக வருடத்திற்கு ரூ.2 லட்சம் லாபமாக கிடைக்கிறது. பெரும்பாலான வேலைகளை நானே செய்வதால், இந்த லாபம் சாத்தியமாகும். நமது உழைப்பு இல்லாமல் வேலையாட்களைக் கொண்டு வேலை செய்யும்போது லாபம் குறையும். தென்னைகளுக்கு இடையே ஊடுபயிராக வாழை சாகுபடி செய்திருக்கிறேன். தற்போது காய்கறிகளை ஊடுபயிராக சாகுபடி செய்ய இருக்கிறேன். ஜூன் மாதத்தில் ஆற்றில் தண்ணீர் வந்தபிறகு காய்கறிகளை ஊடுபயிராக சாகுபடி செய்வேன். இதில் கிடைக்கும் வருமானம் உபரி வருமானமாக இருக்கும். விவசாயத்தில் நமது உழைப்பு இருக்கும்போது கண்டிப்பாக வருமானம் கிடைக்கும். அதனுடன் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களுக்கு நல்ல விலை நிர்ணயம் செய்யும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தென்னையைக் காப்பாற்ற போதிய உரம், நீர் மேலாண்மை, களை நிர்வாகம் என அனைத்தையும் முறையாக கவனித்து வந்தால் நல்ல மகசூலை நிச்சயம் பெறலாம்’’ என்கிறார் ஜார்ஜ்.
தொடர்புக்கு:
ஜார்ஜ்: 94863 15571.

தென்னை மரத்திற்கான உரத்தின் அளவு

தென்னை மரத்தில் நல்ல மகசூல் பெறவும், குரும்பைகள் உதிராமல் இருக்கவும் அதற்கு சரியான நேரத்தில் சரியான உரங்களைக் கொடுக்க வேண்டும். அதாவது 5 வயதிற்கு மேற்பட்ட மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு 50 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது பசுந்தாள் உரம், 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட் 3.5 கிலோ, பொட்டாஷ் மற்றும் 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு ஆகியவற்றை இரண்டாகப் பிரித்து முதல் முறை ஜுன் – ஜுலை மாதத்திலும், இரண்டாம் முறை டிசம்பர் – ஜனவரி மாதத்திலும் இட வேண்டும். அப்படி உரமிடும்போது மரத்தைச் சுற்றி 2 மீட்டர் அளவு தள்ளி வட்டமாக பறித்து உரமிட்டு தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும்.

மாடுகள் வளர்ப்பு

தென்னைக்கு மாட்டுச்சாணமும், சாம்பலும் முக்கிய அடி உரமாக பயன்படுகிறது. அதனால் மாட்டுச் சாணத்திற்காக நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறேன். மாடுகளுக்கான தீவனப் பயிர்களையும் எனது தோட்டத்திலேயே வளர்த்து வருகிறேன். மாடுகளை எனது தென்னந்தோப்பிலேயே மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்து வருகிறேன். தென்னந்தோப்பில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும்போது அவை தேவையற்ற களைகளைச் சாப்பிட்டுவிடும். மாடுகளைப் பாதுகாக்க 350 சதுர அடியில் கொட்டகை அமைத்திருக்கிறேன்.

 

Related posts

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு