Wednesday, September 18, 2024
Home » குணநல ஒழுக்கமே குமரன் வழிபாடு

குணநல ஒழுக்கமே குமரன் வழிபாடு

by Porselvi

உலகில் எந்த மொழிக்கும் இல்லாத ஒரு தனிப்பெருமை தமிழ்மொழிக்கு உண்டு. அது மொழிக்கென்று தனியாக ஒரு கடவுளைப் பெற்றிருப்பது ஆகும். தமிழ்க் கடவுளாக முருகப் பெருமான் விளங்குகிறார்.  குறிஞ்சி நிலத்துக் கடவுளாக விளங்கும் இவரை ‘‘சேயோன் மேய மைவரை உலகமும்’’ என்று தொல்காப்பியம் போற்றுகிறது. முருகனின் பன்னிரு கைகள் பன்னிரு உயிரெழுத்துக்களையும், பதினெட்டுக் கண்கள் பதினெட்டு மெய்யெழுத்துகளையும் ஆயுதமாகிய வேல் ஆயுத எழுத்தையும் குறிக்கிறது என்பர்.

‘முருகு’ என்ற பெயரானது தமிழ்மொழியில் மெல்லின, இடையின மற்றும் வல்லின எழுத்துக்களிலிருந்து எடுத்து சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் முருகப்பெருமானே இரண்டாவது தமிழ்ச்சங்கத்திற்குத் தலைவராகவும் விளங்கியுள்ளார்.இவரைத் தமிழ்ச் சொற்களால் போற்றாமல், திட்டினால் கூட நல்வாழ்வு தருவார் என்று அருணகிரிநாதர்,

‘‘மொய்தார் அனிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழவைப்பான் வெய்ய வாரணம்போல்
கைதான் இருபதுடையான் தலைபத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையான் பயந்த இலஞ்சியமே’’
– என அலங்காரம் செய்கிறார்.

இத்தகு கடவுள், கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தின் முதற்பாடலின் முதற்சொல்லில் ‘‘திகள் தசக்கர’’ என்பதை ‘‘திகட சக்கர’’ என்று திருத்தியதாகவும் அதற்கான இலக்கண விதியைச் சொல்ல, தொல்காப்பியம், நன்னூல் போன்ற நூல்கள் இடம் தராமலிருந்ததால் ‘‘வீரசோழியம்’’ என்ற நூலை வழங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. மேலும், சிவபெருமானுக்கு பிரணவ மந்திர உபதேசத்தையும் முருகன் தமிழ் மொழியில் தான் கூறியுள்ளார்.

இதனை,
‘‘கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரிய
கொஞ்சித் தமிழால் பகர்வோனே’’
என்று திருப்புகழ் பதில் செய்கிறார்.

இதன் மூலம் முருகப்பெருமான் தனித் தமிழ்க் கடவுள் என்பது தெளிவாகிறது. மேலும் தமிழிலக்கிய வைப்பில் ‘பாட்டும் தொகையும்’ முதலிடம் பெறுகின்றன. அவற்றுள் பத்துப் பாட்டில் முதலாவதாக விளங்குவது திருமுருகாற்றுப்படை.இது திருமுருகாற்றுப்படை முருகனின் ஆறுபடை வீடுகளைப் பற்றிப் பதிவு செய்துள்ளது. ஆறுபடை வீடுகளில் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றவையாகும். குடைவரைச் சிலைக்கு திருப்பரங்குன்றமும், கடலின் அலைக்கு திருச்செந்தூரும், குன்றான மலைக்கு பழனியும், அமைதியான நிலைக்கு திருத்தணியும், பாடம் கற்பிக்கும் கலைக்கு சுவாமிமலையும், அழகிய சோலைக்கு பழமுதிர்ச்சோலையும் விளங்குகின்றன. அதில் முருகன் சூரபதுமனை தடித்ததை,

‘‘பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்கு
சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல்’’

என்று நக்கீரர் பதிவு செய்கிறார். அப்படி சூரனை தடித்த நாளே ‘‘சூரசம்ஹாரம்’’ என்று கொண்டாடப்படுகிறது.சூரபதுமன் வரலாற்றைக் கந்தபுராணமானது பின்வருமாறு கூறுகிறது. காசிப முனிவருக்கும் மாயை என்பவளுக்கும் பிறந்தவர்களே சூரபதுமன் உள்ளிட்ட அசுரர்கள். இவர்கள் கடுந்தவம் இயற்றி; சிவபெருமானிடம் ‘‘தன் சக்தியல்லாது வேறு சக்திகளால் அழிவே இல்லை’’ என்ற வரத்தைப்பெற்று 1008 அண்டங்களையும் 108 யுகங்கள் ஆண்டு வந்தனர்.வரம்பெற்ற ஆணவத்தால் தேவர்களைத் துன்புறுத்தத்தினர். அசுரர்கள் துன்பம் தாங்காத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட தனது நெற்றிக்கண்ணைத் திறந்து முருகனைப் பிறப்பித்தார். அதனா,

‘‘அருவமும் உருவமும் ஆகி, அநாதியாய்ப்
பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு
அது ஒரு மேனியாகி,
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்
பன்னிரண்டும் கொண்டே
ஒருதிருமுருகன் வந்து, ஆங்கு உதித்தனன்
உலகம் உய்ய’’

என்று கந்தபுராணம் சுட்டுகிறது. இதில் முருகன் சிவபெருமானின் அவதாரமே என்பது புலனாகிறது. ‘‘தோன்றினன்’’ என்று குறிப்பிடாமல் ‘‘உதித்தனன்’’ என்று கூறுவது, மறைந்திருக்கும் ஒன்றையே வெளிப்படும்போது ‘உதித்தல்’ என்று குறிப்பிடுவர். அவ்வாறு, முருகன் சிவபெருமானின் ஆறாவது முகமாகத் தோன்றினான் என்பது வரலாறு. அழகாய் இருப்பதால் ‘முருகன்’ என்றும் தருப்பை வனத்தில் தோன்றியதால் ‘சரவணன்’ என்றும் கார்த்திகைப் பெண்பால் உண்டதால் ‘கார்த்திகேயன்’ என்று ஆறுமுகம் உடையதால் ‘சண்முகன்’ என்றும் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.

இந்த முருகன், வளர்ந்து சூரனை வதம்செய்ய அன்னை தந்தையரிடம் வேல்பெற்று வதம் செய்தது ‘‘கந்தர் சஷ்டி’’ என்று ஆறுநாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.இவ்விழா, திருத்தணியைத் தவிர மற்ற படைவீடுகளிலும், புகழ்ப்பெற்ற முருகன் ஆலயங்களிலும் மலேசியா பத்துமலை முருகன்கோயில், சிங்கப்பூர் ஈப்போ முருகன்கோயில், இலங்கை கதிர்காமம் போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஆறாவது நாள் சூரபதுமன் தலைகீழான மாமரவடிவத்தில் வர, முருகன் வேலாயுதத்தால் பிளந்து சேவலும் மயிலாகக் கொண்டதை,

‘‘மீறும் இலஞ்சிக் குறத்தியைக் கொண்ட
செவ்வேட் குறவன் முதல்வேட்டைக்குப் போநாள்
ஆறுநாட் கூடி ஒருகொக்குப் பட்டது
ஆகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சுாறாக வைத்தபின் வேதப்பிராமணர் தாமும்

கொண்டார் சைவர் தாமும் கொண்டார்
பேறா முனிவரும் ஏற்றுக்கொண்டார் இதைப்
பிக்குச் சொல்லாமலே கொக்குப் படுக்கவே’’
என்று திருக்குற்றாலக் குறவஞ்சி கூறுகிறது.

இதில் சூரனை ‘‘கொக்கு’’ என்று குறிப்பிடுவது மாமரம் என்ற பொருளிலாகும். அந்த மாரமாகிய கொக்கை அறுந்த கோவாகிய முருகனையே சேவல் ‘‘கொக்கு+அறு+கோ’’ என்று கூவுகிறது என்பர் பெரியோர். இதுவே கொக்கறக்கோ என ஆனது.அனைத்து ஆயுதங்களும் அழிக்கக்கூடியவை. ஆனால், வேலாயுதம் மட்டும் காத்து நின்றது. இது தீமை புரிந்த சூரனை அழிக்காமல் சேவலும் மயிலுமாக மாற்றியது. அதனால்தான் மனிதர்களுக்கு ‘வேலாயுதம்’ என்று பெயர் வைக்கப்படுகிறது. வேறு எந்த ஆயுதங்களின் பெயரும் சூட்டப்படுவதில்லை.

முருகனையே தனிப்பெருங்கடவுளாக வணங்கும் கௌமார சமயத்தில் வேலினைத் தனியே வழிபடுவது பழக்கத்தில் உள்ளது. இந்த வேலானது ஆழ்ந்து அகலமாக கூர்மையுடன் இருப்பது மனிதனுக்கு அறிவு எப்படியிருக்க வேண்டும் என்பதன் குறியீடு ஆகும்.சூரனை தன்மை மாற்றம் செய்த திருச்செந்தூரில் பன்னீர் இலையில் திருநீறு வழங்கப்படுகிறது. இந்த இலையானது வலிப்பு, காசம், கயம், குட்டம் போன்ற நோய்களைத் தீர்க்கும் மருத்துவத் தன்மையுடையது. தீராத வயிற்றுவலியை இலைத்திருநீறு போக்கியதால் ஆதிசங்கரர் இங்கு ‘சுப்ரமணிய புஜங்கம்’ என்ற நூலைப் பாடியுள்ளார்.

இவ்விலையிலுள்ள பன்னிரு நரம்புகள் முருகனின் பன்னிரு கைகளைக் குறிப்பதாகும். இவ்விலையில் விபூதி பெறுவது முருகனின் பன்னிரு கைகளில் பெற்றதற்கு இணையாகக் கருதப்படுகிறது.
ஆறுநாள் விரதமானது குழந்தைப்பேற்றை நல்குவதாகும். ‘‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’’ என்பது பழமொழி. ஆனால் இதன் உண்மை விளக்கம் ‘‘சஷ்டியில் இருந்தால் அகப்பையாகிய
கருப்பையில் குழந்தை வரும்’’ என்பது.

இந்த முருக வழிபாடு குழந்தையை மட்டுமே நல்காமல் நல்ல குணத்தையும் நல்குவதாக உள்ளது. எவ்வளவுதான் அறிவு இருந்தாலும் அது ஆக்குவதற்காகப் பயன்பட வேண்டும். அழிப்பதற்கு அல்ல என்பதை உணர்த்துகிறது.

முருகனிடம் என்ன வேண்ட வேண்டும் என்பதை, பரிபாடல்
‘‘…………… ……………….. யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல:- நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்’’என்கிறது.
இவ்வாறான குணத்தையும் கொடுப்பதே குமரன் வழிபாடு.

சிவ.சதீஸ்குமார்

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi