கூடுவாஞ்சேரி சார்பதிவாளரின் வீடு புகுந்து ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் சென்னையில் போலி பத்திரிகையாளர் கைது

 

 

 

  • நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 27ம் தேதி வரை புழல் சிறையில் அடைப்பு
  • ஏராளமான புகார்கள் குவிவதால் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திட்டம்

சென்னை: கூடுவாஞ்சேரி சார்பதிவாளரின் வீட்டிற்குள் நுழைந்து ரூ.50 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் போலி பத்திரிகையாளர் வராகி என்பவரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். வராகி மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருவதால் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (46). இவர் கூடுவாஞ்சேரி சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். வைத்தியலிங்கம் கடந்த 11ம் தேதி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது: விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வராகி (எ) கிருஷ்ணகுமார் (50). இவர் தன்னை சீனியர் பத்திரிகையாளர் என்று தன்னைத் தானே கூறிக் கொண்டு பல்வேறு சமூக வலைதளங்களில், ஆதாரமில்லாமல் மிரட்டல் தொனியில் பேசி வருகிறார். இந்நிலையில் வராகி, சார் பதிவாளர் வைத்தியலிங்தை தொடர்பு கொண்டு, “நீங்கள், கூடுவாஞ்சேரி பகுதியில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளீர்கள். இதுதொடர்பாக நான் செய்தி வெளியிட உள்ளேன்” என்று மிரட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து, கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்திற்கே நேரில் வந்தும் வைத்தியலிங்கத்தை சந்தித்து மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். அதற்கு வைத்தியலிங்கம், எந்தத் தவறும் செய்யாத நான், எதற்கு உங்களுக்கு அநாவசியமாக பயப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

“வைத்தியலிங்கம் வழிக்கு வரவில்லை” என்று தெரிந்து கொண்ட வராகி, வழக்கம்போல் அவரது யூடியூப் வீடியோவை ஆயுதமாக பயன்படுத்தி, வைத்தியலிங்கத்தைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். அதற்கு பிறகும் வைத்தியலிங்கம் உடன்படாததால், மயிலாப்பூரில் உள்ள வைத்தியலிங்கத்தின் வீட்டிற்கே வராகி தனது கூட்டளிகளுடன் நேரடியாக வந்து, ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். “பணம் கொடுக்கவில்லை என்றால், அனைத்துப் பத்திரிகையிலும் செய்தி வந்துவிடும்” என்று கூறியுள்ளார். அப்போதும் வைத்தியலிங்கம் அசைந்து கொடுக்காமல், “உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். “என்ன செய்தாலும் வைத்தியலிங்கம் வழிக்கு வரவில்லையே” என்று அதிர்ந்துபோன வராகி, இறுதியாக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.

அடிக்கடி வாட்ஸ்அப் மூலம் தொல்லை கொடுத்து வந்துள்ளார். “எனக்கு பெரிய இடத்தில் எல்லாம் தொடர்பு உள்ளது, உயர் காவல்துறை அதிகாரி ஒருவரும் எனக்குத் தெரிந்தவர்தான், நான் நினைத்தால் எல்லா பத்திரிகைகளிலும் உங்கள் குடும்பத்தை பற்றி செய்திகள் வரச் செய்துவிடுவேன்” என்றெல்லாம் கதை அளந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சார்பதிவாளர் வைத்தியலிங்கம், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி வராகி மீது புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சார்பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் வராகியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் சிசிடிவி ஆதாரங்கள், செல்போன் கால்லிஸ்ட் உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரமாக கொண்டு, போலி பத்திரிகையாளர் வராகி (எ) கிருஷ்ணமூர்த்தி மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி, கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் (66டி) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ், மயிலாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை 18வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வராகி, நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 27ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து வராகியை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

* புரோக்கர் வேலை பார்த்து பல கோடி சுருட்டியது அம்பலம்
கைது செய்யப்பட்ட போலி பத்திரிகையாளர் வராகி (எ) கிருஷ்ணகுமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நிலத்தரகில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் சுருட்டியதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், தாம்பரம்- வண்டலூர் இடையே உள்ள ஊரப்பாக்கத்தில் 2 ஏக்கர் 43 சென்ட் மற்றும் 1 ஏக்கர் 57 சென்ட் என மொத்தம் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ராமசாமி மகன் முத்துலிங்கம் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.300 கோடி. இந்த நிலத்தை மயிலாப்பூரை சேர்ந்த மங்களம் என்பவரால் மயிலாப்பூர் முண்டகண்ணியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சாரதி வீரராகவன் என்பவருக்கு செட்டில்மெண்ட் ஆவணமாக கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் எழுதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் ரூ.300 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை தனது தந்தை சுப்ரமணிய ஆச்சாரி மூலம் கிடைத்தது என்றும், இதனால் தனது சொத்தினை தனது பேரன் சாதி வீரராகவனுக்கு செட்டில்மெண்ட் எழுதி கொடுப்பதாக பதிவு செய்துள்ளனர். இந்த நிலத்திற்கான ஆவணங்களை சார் பதிவாளர் வைத்தியலிங்கம் ஆய்வு செய்ததில், சொத்து உரிமை கோரிய மங்களம் என்பவர் பெயரில் நிலம் இல்லை. அவரது பெயரில் நிலத்திற்கான பட்டாவும் இல்லை என தெரியவந்ததால், மங்களம் தாக்கல் செய்த செட்டில்மெண்ட் ஆவணத்தை பதிவு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளார். இதனால் மங்களம் என்பவரால் நிலத்தை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

உடனே போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள், வராகியின் உதவியை நாடியுள்ளனர். அப்போது ரூ.300 கோடி நிலத்தை பத்திரப் பதிவு ெசய்து கொடுத்தால் ரூ.15 கோடி கொடுப்பதாக கூறியுள்ளனர். அதற்கு வராகி, நிலத்தை பத்திரப்பதிவு செய்ய உதவி செய்வதாக கூறி முன்பணமாக ரூ.5 கோடியை பெற்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, வராகி தனது கூட்டாளிகளுடன் சார் பதிவாளர் வைத்தியலிங்கத்தை நேரில் சந்தித்து பல முறை பத்திரப் பதிவு செய்து கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் வைத்தியலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் ரூ.300 கோடி நிலத்தை முடித்து கொடுக்காததால் முன்பணமாக பெற்ற ரூ.5 கோடியை சம்பந்தப்பட்ட நபர்கள் திரும்ப கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த வராகி, சார் பதிவாளர் வைத்தியலிங்கத்திடம் உன்னுடைய மோசடிகள் குறித்து தன்னிடம் ஆவணம் உள்ளது என்றும், அதை நான் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
அதற்கும் சார்பதிவாளர் வைத்தியலிங்கம் ஒப்புக்கொள்ளாததால், அவரது வீட்டிற்கே நேரில் சென்று, ‘உன்னால் எனக்கு ரூ.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறி கூட்டாளிகளை வைத்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார்’. இதனால் அதிர்ச்சி அடைந்த வைத்தியலிங்கம், சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

* போலி பத்திரிகையாளர் வராகியின் மிரட்டலால் மேலும் சில நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. எனவே வராகியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தயக்கமின்றி தங்களது புகார்களை காவல்துறையினரிடம் 044-23452324, 044-23452325 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* யார் இந்த வராகி? திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு
கைது செய்யப்பட்ட வராகி, விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்திய மக்கள் மன்ற நிறுவனராக உள்ளார். இவர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு செயலாளர்கள் பலருடன் நெருங்கிப் பழகுவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, தன்னை பத்திரிகையாளர் என்று கூறிக் கொண்டும் அரசு அலுவலர்கள் பலரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். மேலும் பலவிதமான கட்டப்பஞ்சாயத்துக்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். சார்பதிவாளர் வைத்தியலிங்கத்தை போல், தாம்பரம் சார்பதிவாளர் பாடலிங்கம், சேலையூர் சார்பதிவாளர் மஞ்சு ஆகியோரையும் பல லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வந்த அதிர்ச்சியான தகவல்களும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் ‘ஸ்பா’ நடத்தும் உரிமையாளர் கார்த்திக் என்பவரிடம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக மிரட்டி அவரிடம் ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 2023ம் ஆண்டு பள்ளிக்கரணை போலீசார் வராகியை கைது செய்ததும், விருகம்பாக்கத்தில் இளம் பெண் ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் குடும்பம் நடத்தி பல லட்சம் பணம் பறித்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வராகியை கைது செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வராகி தன்னை ஊடகவியலாளர் என்று கூறிக் கொண்டு போலியான பத்திரிகையாளர் அடையாள அட்டையை தயாரித்து வைத்துக் கொண்டு அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் வீடியோக்களில் தாறுமாறாக பேசி மிரட்டி பணம் பறித்து வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் நடைபெறவுள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது பற்றி தமிழக அரசு ஆலோசனை..!!

பல்கலைக்கழக இணை வேந்தரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை