தமிழில் குடமுழுக்கு நடத்த கூறியவர் மீது தாக்குதல் ஓசூரில் பாஜ தலைவர் கைது

ஓசூர்: ஓசூரில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தியவர் மீது தாக்குதல் நடத்திய பாஜ., தலைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே குமரன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தமிழ்தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். ஓசூரில் நேற்று முன்தினம் சந்திரசூடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவை, தமிழில் நடத்த வேண்டும் என, தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் தெய்வ தமிழ் பேரவை சார்பில், கோயில் செயல் அலுவலர் சாமிதுரையிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பின், தமிழ், சமஸ்கிருத மொழிகளில் பூஜை செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக மாரிமுத்து மற்றும் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அழைப்பின்பேரில் கோயிலில் உள்ள அலுவலகத்திற்கு மாரிமுத்து, சுப்பிரமணி ஆகியோர் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தியபோது, கும்பாபிஷேகத்தை சமஸ்கிருதத்தில்தான் நடத்த வேண்டும் என கூறி, மாரிமுத்து மற்றும் சுப்பிரமணியை, சிலர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாரிமுத்து, ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் தாக்கியவர்களை தேடி வந்தனர். அதேபோல், பூ அலங்காரம் செய்யும், தளி சாலையில் உள்ள லிட்டில் ஹவுஸ் ரெசிடென்சியை சேர்ந்த ரமேஷ், என்பவர், தமிழ் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, நகர செயலாளர் முருகபெருமாள், சுப்பிரமணி ஆகியோர் தன்னை தாக்கியதாக, ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில், மாரிமுத்து, சுப்பிரமணி, ரமேஷ் ஆகிய 3 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தியதாக ஓசூரை சேர்ந்த மஞ்சுநாத் (42), பார்வதி நகரை சேர்ந்த வினோத் (31) ஆகியோரை போலீசார் நேற்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் மஞ்சுநாத், கிருஷ்ணகிரி மாவட்ட பாஜ., ஐடி விங்க் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி.. நான் நலமாக உள்ளேன்; வழக்கமான பரிசோதனை என விளக்கம்!!

தமிழ்நாட்டில் தேனி உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு