இந்த ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் 1900 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்


இந்தாண்டு செப்டம்பருக்குள் 1900 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பேராவூரணி அசோக்குமார் (திமுக) எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: புராதனவனேஸ்வரர் கோயிலுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்துள்ளது. தற்போது பணிகள் மேற்கொள்ள ரூ.83 லட்சத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் பணிகள் தொடங்கப்படும். அசோக்குமார்: பேராவூரணி தொகுதியில் உள்ள புராதவனேஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோயில், ‘’காசியை விட திருச்சிற்றம்பலம் சிவனுக்கு வீசம்பங்கு வழிபாடுகளுக்கு பலன்கள் கூட’’ என்று பாண்டிய மன்னனுக்கு சிவபெருமான் தோன்றி சொன்னதாக வரலாறு உண்டு.

இத்தகைய சிறப்புடைய கோயிலுக்கு ரூ.83 லட்சம் வழங்கியதற்கு அரசுக்கு நன்றி. அமைச்சர் சேகர்பாபு: திருமண மண்டபங்களை பொறுத்த அளவில், திருமணத்திற்கு ஏற்ற தலங்களாக இருக்கின்ற இடங்களில், இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 97 திருமண மண்டபங்கள் சுமார் ரூ. 350 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உறுப்பினர் கோரிய திருமண மண்டபத்திற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். உறுப்பினர் கோரிய கதலிவனேஸ்வரர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில், சென்னியம்மன் கோயில், குறிச்சி சிவன் கோயில், பால சுப்பிரமணியன் கோயில் ஆகிய 5 கோயில்களிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

குடமுழுக்கு, திருமண மண்டபங்கள் போன்ற பணிகளை எடுத்துக் கொண்டு விரைவாக நிறைவேற்றித் தரப்படும். தமிழ்நாட்டில் செப்டம்பர் மாத இறுதிக்குள் 1,900 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட இருக்கின்றன. இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!