கூடலூர் அருகே கோயில் அருகே உலா; ‘போ கணேசா’ எனக்கூறி யானையை அனுப்பிய மக்கள்


கூடலூர்: ‘போ கணேசா’ எனக்கூறி காட்டு யானையை வனப்பகுதிக்கு கிராம மக்கள் அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் பல்வேறு பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. சுற்று வட்டார பகுதியான மேல் கூடலூர், கோத்தர் வயல், ஏழுமுறம், தோட்ட மூலா உள்ளிட்ட பல இடங்களில் காட்டு யானை இரவு நேரங்களில் உலா வருகிறது. இவ்வாறு வரும் யானைகள் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு வனக்குழுவினர் வந்து விரட்டுவது வழக்கமாக நடக்கிறது. இந்நிலையில் ஏழுமுறம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகில் ேநற்று முன்தினம் காலை 7 மணிக்கு காட்டு யானை ஒன்று வந்து நின்றது.

கோயில் அருகில் யானை நிற்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அவர்கள், ‘போ கணேசா, போயிரு’ என காட்டு யானையை பார்த்து சத்தமிட்டனர். இதையடுத்து சிறிது நேரம் அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை அங்கிருந்து சென்றது. பொதுவாக, யானையை விரட்ட பட்டாசு வெடித்தும், தகரங்களை தட்டியும் சத்தம் எழுப்புவது வழக்கம். ஆனால் ‘‘போ கணேசா…’’ என்று சொன்னதும் யானை வனப்பகுதிக்கு சென்ற சம்பவம் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related posts

ஜாபர் சேட் மீதான அனைத்து வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை

கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!