கூடலூரில் 110 கேவி., திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்

*மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்

ஊட்டி : கூடலூரில் 110 கேவி., திட்ட சோதனை முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளது. உரிய அனுமதி பெற்று மிக விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ஊட்டியில் நடந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மின் பகிர்மான வட்ட அளவிலான நுகர்வோர் காலாண்டு கூட்டம் ஊட்டியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. செயற்பொறியாளர் (பொது) ரமேஷ் வரவேற்றார்.கோவை மண்டல தலைமை பொறியாளர் வினோதன் தலைமை வகித்தார்.

நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வில்வராஜ், செயற்பொறியாளர்கள் சதீஷ்,சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம்,குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க பொருளாளர் சுப்பிரமணி, கோத்தகிரி புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் சலீம்,ஊட்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் அமீன் ஆகியோர் பங்கேற்று மின்வாரிய அலுவலகங்களில் ஏற்கனவே சிஎப்எல்., பல்புகள் விற்பனை செய்தது போல, எல்இடி., பல்புகளும் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரக்கிளைகள் விழுந்து மின்தடை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணங்கள் குறித்த தகவல்களை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.கோத்தகிரி பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்ய வேண்டும். மின் கட்டணங்கள் குறித்த எஸ்எம்எஸ் உரிய நேரங்களில் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்ைவத்து பேசினர்.

கோவை மண்டல தலைமை பொறியாளர் வினோதன் பதிலளித்து பேசுகையில்: மின்சாரம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட சூழலில் பொதுமக்களின் குறைகளை மின்சார வாரியத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறது. குறைகள் களைவதற்காக மின் நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டங்களும் மாதந்தோறும் ஒவ்வொரு உதவி மின் கோட்ட அளவில் மேற்பார்வை பொறியாளர் தலைமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை சுட்டிக்காட்டி நிவாரணம் பெற முடியும்.

கூடலூர் 110 கேவி திட்டம் சோதனை முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளது. உரிய அனுமதி பெற்று மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும். மின் விநியோகங்கள் தடைபடாமல் இருப்பதற்காக மின் வழித்தடங்களில் மரக்கிளைகள் விழுந்தாலும் மின் தடை ஏற்படாமல் இருக்க ஸ்டண்டர்ட் கேபிள் போட உள்ளது. மேலும் புதிய நடவடிக்கையாக மரங்கள் அதிகமாக செல்லும் பகுதிகளில் மின் கம்பிகளில் ஸ்லீப் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்து மின்தடை ஏற்படுவது தவிர்க்கப்படும். மின் வழித்தடங்களில் வீடுகள் கட்டுவது, இதர கட்டுமான பணிகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் இதனால் கட்டுமானத்துக்கு பிறகு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியும்.

மின்கம்பிகள் செல்லும் வழித்தடங்களில் கட்டுமானம் கட்டும் முன்னர் மின்வாரியத்தில் தகவல் தெரிவித்து மின் வழித்தடத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டணங்கள் குறித்து விரிவான தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேரில் வந்து தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சூழல் இல்லை தற்போது இணைய வழியிலும் மின் கட்டணங்கள் செலுத்த முடியும் அல்லது முன்கூட்டியே கட்டணங்கள் செலுத்தி வைக்க முடியும். இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து மின் சேவைகளுக்கும் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வசதி உள்ளது. எனவே அலுவலகங்களை தேடிச் சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இணைய வழியில் விண்ணப்பித்து அதன் மூலம் கட்டணங்கள் செலுத்தும்போது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். எல்இடி., பல்புகள் விற்பனை குறித்து கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.புதியமின் மீட்டர் பொருத்துவது மின் நுகர்வோர் களுக்கு எளிதாக அமையும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் மின் கட்டணம், மின் பயன்பாடு குறித்து மீட்டரில் நுகர்வோர்கள் பார்த்து கொள்ள முடியும்.உரிய காலத்தில் மின் கட்டணம் செலுத்த தவறினால் தானாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார். கூட்டத்தில் கோட்ட பொறியாளர்கள் மாரிமுத்து, சிவக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி