குச்சனூர் பேரூராட்சி நாயன்குளம் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

சின்னமனூர் : சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாயன்குளத்தை கடந்த 25 ஆண்டுக்கு முன் சிலர் அத்துமீறி ஆக்கிரமித்து 100க்கும் மேல் புளிய மரங்களை உயரமாகவும், அகலமாகவும் வளர்த்து பெரும் தோப்பாக மாற்றி வைத்துள்ளனர். மேலும் குளத்திற்குள் நரசிங்க பெருமாள் கோயில் கட்டி பக்தர்கள் பூஜைகள் செய்யும் தியான கூடமாகவும் மாற்றி வைத்துள்ளனர். இந்த நாயன்குளம் பாதியளவில் புளியந்தோப்பாக இருப்பதால் வருடம் ஒருமுறை புளியம்பழங்களை அறுவடை செய்து மூட்டை, மூட்டைகளாக கட்டி எடுத்து சென்று சந்தையில் விற்று ஆக்கிரமிப்பாளர்கள் நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

மேலும் 3 வழிகளில் வரும் ஓடைகளுமே பராமரிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு கிடக்கிறது. இதனால் மழையால் வெள்ளமாக வரும் நீரும் கடக்க வழியின்றி நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதுடன் அருகிலுள்ள கள்ளபட்டியான் காலனிக்குள் நுழைந்து வீடுகளையும் சேதப்படுத்துகிறது.

இதேபோல் துரைச்சாமிபுரத்தில் குலசேகரன்குளம் சுமார் 10 ஏக்கருக்கு மேல் இருக்கிறது. இங்கும் நிலத்தடி நீர் ஊற்றெடுத்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த குளத்தையும் சிலர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக பாதியளவில் ஆக்கிரமித்து தென்னை, வாழை தோப்புகளாக பட்டா நிலங்களுடன் இணைத்து அவர்களது நிலங்களை விரிவுபடுத்தியுள்ளனர். பொது நலத்திற்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த குளங்களை சுயநலத்திற்காக அத்துமீறி பலரும் ஆக்கிரமித்துள்ளதால் பாசன நீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரு குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த அதிமுக ஆட்சியில் குச்சனூர் பேரூராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் மனுக்களை நேரில் கொடுத்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஐகோர்ட் உத்தரவுப்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தற்போது நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த இரு குளங்களின் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக குச்சனூர் பேரூராட்சி செயல் அலுவலர் முத்துவேல், பேரூர் மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பொறியாளர் இளவரசு உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நாயன் குளத்தில் ஆய்வு செய்து, அங்கு கட்டப்பட்டிருக்கும் தியான கூடம் கோயில் சமையலறை கட்டிடங்களையும் இடித்து அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 16 தென்னை மரங்கள், 9 புளிய மரங்களை பேரூராட்சி நிர்வாகத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதனை விரைவில் பேரூராட்சி வருமானத்திற்காக ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கட்டமாக குலசேகரன்குளத்தில் இருக்கிற ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் முத்துவேல் தெரிவித்தார்.

Related posts

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து

ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-தென்ஆப்ரிக்கா பைனலில் இந்தியா பேட்டிங் தேர்வு

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்