கே.எஸ்.அழகிரி அதிரடி மாற்றம் தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இருந்து வந்தார். 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 6 ஆண்டுகள் மாநில தலைவராக இருந்தார். வழக்கமாக மாநில தலைவராக நியமிக்கப்படுகிறவர் 3 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிப்பார்கள். ஆனால் கே.எஸ்.அழகிரி தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் அவர் மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகும். யாரையாவது ஒருவரை நியமிக்கப் போகிறார்கள் என்று செய்தி வரும். அவருக்கு எதிரணியைச் சேர்ந்தவர்கள் டெல்லி சென்று புகார் கூறுவார்கள். ஆனால் புதிய நியமனங்கள் நியமிக்கப்படாது. அழகிரியே தொடர்ந்து இருந்து வந்தார். இதனால் 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் அவர் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் தன்னை மாற்ற வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதால் சட்டப்பேரவை தேர்தலின்போது அவர் மாற்றப்படவில்லை.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டப்பேரவை கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின், மாநில தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியின் தலைமையின் கீழ் மக்களவை, சட்டப்பேரவை என இரு தேர்தல்களிலும் அக்கட்சி பெரும் வெற்றியை பெற்றது. இதனால் இந்த மக்களவை தேர்தலுக்கும் தான் மாநில தலைவராக நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டார் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை என்று தெரியவந்தது. இந்தநிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு திடீரென மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக உள்ள

செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். வக்கீலுக்கு படித்த செல்வப்பெருந்தகை, ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றினார். பின்னர் புரட்சி பாரதம் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் புதிய தமிழகம் கட்சியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். 2006ம் ஆண்டு மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது செல்வப்பெருந்தகைக்கும், திருமாவளவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் எம்எல்ஏவாக இருந்தபோதே, பகுஜன் சமாஜ் கட்சியில் 2008ம் ஆண்டு இணைந்து, தமிழக தலைவராக செயல்பட்டார்.

2010ம் ஆண்டு முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிதம்பரம் மூலம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் 2011ல் செங்கம் தொகுதியிலும், 2016ல் பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021ம் ஆண்டு பெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ளார். இவரை மாநில காங்கிரஸ் தலைவராக நியமிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் நேற்று இரவு அறிவித்தார். மேலும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டார். கே.எஸ்.அழகிரி, பதவியில் இருந்த காலத்தில் திறம்பட செயல்பட்டதாக வேணுகோபால் பாராட்டியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு: 15 விமானங்கள் தரை இறங்க முடியாமல் தத்தளிப்பு

சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு

ஜூலை 13: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை