ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கை தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: வட மாநிலங்களுக்கு சாதகம், தென் மாநிலங்களுக்கு பாதகம் என்று செயல்படும் ஒன்றிய பாஜ அரசின் பாரபட்ச நடவடிக்கை, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சரக்கு போக்குவரத்திற்காக உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள் வழியாக 3381 கி.மீ. தனி சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை 2014ல் ஆட்சிக்கு வந்ததும் ஒன்றிய பாஜ அரசு தொடங்கியது. அதில், நிறைவு பெற்றுள்ள 2079 கி.மீ. தனி ரயில் பாதையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

கடந்த 9 ஆண்டு பாஜ ஆட்சிக் காலத்தில் தெற்கு ரயில்வே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜ அரசால் அறிவிக்கப்பட்ட சென்னை-மகாபாலிபுரம்-கடலூர், திண்டிவனம்-செஞ்சி-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை, தூத்துக்குடி-அருப்புக்கோட்டை-மதுரை ஆகிய ரயில் திட்டங்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக எந்தவிதமான ஆய்வோ, நிதி ஒதுக்கீடோ செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதைவிட ஒரு அநீதியை பாஜ அரசு தமிழகத்திற்கு இழைக்க முடியாது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவிகிதம். பிரதமர் மோடியை பொறுத்தவரை உத்தரபிரதேசத்திற்கும், குஜராத் மாநிலத்திற்கும் காட்டுகிற அக்கறையை தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு காட்டுவதில்லை. இத்தகைய போக்கு நீடிக்குமேயானால் வட மாநிலங்களுக்கு சாதகமாகவும், தென் மாநிலங்களுக்கு பாதகமாகவும் ஒன்றிய பாஜ அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு வலிமை பெற்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா