கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன் தற்கொலை

கோவை: கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பையா என்கிற கிருஷ்ணன் (65). இவர் கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு வசந்தாமணி என்ற மனைவியும், சசிகலா, பூர்ணிமா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. 2021ம் ஆண்டு கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கடந்த சில நாட்களாக இவர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. கட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை இவர் தனது தோட்டத்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து காளப்பட்டியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அமைச்சர்கள் முத்துச்சாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் மற்றும் நிர்வாகிகள் பையா கவுண்டர் வீட்டிற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை : கோவை மாநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கவுண்டம்பாளையம் பகுதியில் அவர் ஆற்றி வந்த மக்கள் தொண்டு மகத்தானது. பையா என்ற கிருஷ்ணனின் திடீர் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பையா என்ற ஆர்.கிருஷ்ணன் அவர்களின் களப்பணியும், கழகப் பணியும் என்றென்றும் நினைவுகூரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்