கிருஷ்ணகிரிக்கு தஞ்சையிலிருந்து 2 ஆம்னி பஸ்களில் கடத்தி வந்த 17 உடும்புகள் பறிமுதல்

*3 பேரை கைது செய்து வனத்துறை விசாரணை

கிருஷ்ணகிரி : தஞ்சாவூரில் இருந்து, ஆம்னி பஸ்களில் கிருஷ்ணகிரிக்கு கடத்தி வரப்பட்ட 17 உடும்புகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அடுத்த சிக்காரிமேடு என்ற இடத்தில், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் வனப்பகுதிகளுக்கு சென்று, முயல், உடும்பு, காடை, கவுதாரி, காட்டுக்கோழி போன்றவற்றை வேட்டையாடி, அதை வார விடுமுறை நாட்களில் கிருஷ்ணகிரி மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். சிலர் தங்கள் வீடுகளிலேயே சமைத்து கொடுத்து, வருமானம் ஈட்டி வருகின்றனர். வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, வன உயிரினங்களை வேட்டையாடுவதை தடுக்க, வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், தஞ்சாவூரில் இருந்து பெங்களூரு நோக்கி வரும் ஆம்னி பஸ்களில், உடும்புகள் கடத்தப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி சிக்காரிமேடு பகுதிக்கு வந்த 2 ஆம்னி பஸ்களை நிறுத்தி, வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த பஸ்களில் உயிருடன் 17 உடும்புகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், ஆஸ்துமா உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகளை தீர்ப்பதற்காகவும், உடும்பு எண்ணெயில் இருந்து மசாஜ் செய்வதற்காகவும், உடும்புகள் கடத்தி வரப்படுவதாக தெரியவந்தது. மேலும், இதற்காக புரோக்கர்கள் செயல்பட்டு வருவதும், அவ்வாறு கடத்தி வரப்படும் உடும்புகள் கிருஷ்ணகிரி சிக்காரிமேட்டில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, உடும்பு விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (33), சிக்காரிமேடு பகுதியைச் சேர்ந்த தேவா (28), பனகமுட்லு அடுத்த ஏரியூரைச் சேர்ந்த ராஜா (35) ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், உடும்புகளை கடத்தி வந்த 2 ஆம்னி பஸ்களையும் பறிமுதல் செய்து, அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Related posts

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!