கூட்டமாக சென்று தரிசனம் செய்ததால் கிருஷ்ண பக்தர்கள் மீது போலீஸ் தடியடி: அரசியல் கட்சிகள் கண்டனம்

புனே: ஆலண்டி சுவாமி விதோபா திருத்தலத்தில் சாமி தரிசனம் செய்ய கூட்டமாக சென்ற கிருஷ்ண பக்தர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்த ஆலண்டி என்ற இடத்தில் பகவான் கிருஷ்ணனின் வடிவமாக பார்க்கப்படும் சுவாமி விதோபா திருத்தலம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ‘வார்காரிஸ்’ பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வார்கள். கடந்த முறை ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. அதையடுத்து இந்த முறை 75 பேர் மட்டும் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில் அதிகமானோர் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் வார்காரிஸ் பக்தர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் போலீசார் பக்தர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், ‘ஐயோ.. இந்துத்துவா அரசின் பாசாங்குகள் அம்பலமானது. முகமூடி அவிழ்ந்தது. மகாராஷ்டிராவில் முகலாயர்கள் மறுஅவதாரம் எடுத்துள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வார்காரிஸ் பக்தர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய விதம் மிகவும் மூர்க்கத்தனமானது என்று தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து பிம்ப்ரி-சின்ச்வாட் போலீஸ் கமிஷனர் வினய் குமார் சவுபே கூறுகையில், ‘ஆலண்டியில் லத்தி சார்ஜ் எதுவும் நடக்கவில்லை. கடந்த ஆண்டைப் போல் நிலைமை ஏற்படக்கூடாது என்பதால், ஒவ்வொரு பல்லக்கில் இருந்தும் 75 பேரை அனுப்பி வைத்தோம்’ என்றார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது