கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித்திரியும் மாடுகள் ஏலம் விடப்படும்: அங்காடி நிர்வாகம் அதிரடி

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் உலா வரும் மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும். உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என இரண்டாவது முறையாக அங்காடி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி, பழங்களை மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கின்றனர். இவற்றை சாப்பிட கோயம்பேடு, நெற்குன்றம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் சுமார் 100க்கும் மேற்பட்ட பசு, எருமை மாடுகள் வருகின்றன. இந்த மாடுகள் திடீரென சண்டை போட்டுக்கொண்டு ஓடும்போது வியாபாரிகள், பொதுமக்கள் பயப்படுகின்றனர்.

மாடுகள் வேகமாக ஓடும்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகளை நாசம் செய்துவிடுகிறது. இதனால் மார்க்கெட்டில் சுற்றிவரும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் அங்காடி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது மார்க்கெட்டில் சுற்றிவந்த பசு மாடுகள், எருமை மாடுகளை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் மார்க்கெட்டில் சுற்றிவந்த மாடுகளை அங்காடி நிர்வாகத்தின் காவலாளிகள் சுமார் 10 மாடுகளை பிடித்து சென்றனர். மாடுகளை அங்காடி நிர்வாகம் பிடித்து வைத்திருப்பது தெரியவந்ததும் அவற்றின் உரிமையாளர்கள் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதியை சந்தித்து மாடுகளை விடுவிக்கும்படியும் மாடுகள் இனிமேல் மார்க்கெட் உள்ளே வராதபடி பார்த்துக் கொள்கிறோம் என கேட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து அங்காடி நிர்வாகம் சார்பில் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் மாடுகள் உள்ளே வருவது தடை செய்யப்பட்டுள்ளது. மாடுகளை உரிமையாளர்கள் தங்களது இடத்தில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதை மீறி மார்க்கெட்டில் மாடுகளை விட்டால் அந்த மாடுகள் ஏலம் விடப்படும் என்று உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுவித்து இருந்தோம். அப்படியிருந்தும் மறுபடியும் மாடுகளை மார்க்கெட்டில் விடுகின்றனர். இனிமேல் இப்படி செய்தால் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் இரண்டாவது முறையாக மார்க்கெட்டில் மாடுகள் உள்ளே வந்தால் பாரபட்சம் இல்லாமல் ஏலம் விடப்படும் என கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

மீண்டும் மார்க்கெட்டில் மாடுகள் சுற்றி திரிந்தால் ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித் திரியும் மாடுகளால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மார்க்கெட்டில் மாடுகள் வராதபடி கட்டுப்படுத்த அந்தந்த கேட்டில் ஆட்களை நியமித்துள்ளோம். இதனால் கடந்த இரண்டு நாட்களாக மார்க்கெட்டில் மாடுகள் வருவதில்லை. மார்க்கெட்டுக்குள் மாடுகள் வருவதை கண்காணிப்பு கேமரா மூலம் அறிந்து ஒலிபெருக்கி மூலம் ஆட்களை கொண்டு விரட்டி வருகிறோம். மீண்டும் மார்க்கெட்டில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம் விதிக்காமல் ஏலம் விடப்படும்’ என்று அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* மாடு உரிமையாளர்கள் கடிதம்
மாடுகள் மார்க்கெட் வளாகத்தில் சுற்றித்திரிந்தால் இனி ஏலம் விடப்படும் என அங்காடி நிர்வாகம் அறிவித்ததை ெதாடர்ந்து, மாட்டின் உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் மாடுகள் வராமல் பார்த்துக் கொள்கிறோம். இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது. மாடுகளை வீட்டில் கட்டிவைத்து பாதுகாத்து கொள்கிறோம்’’ என கடிதம் எழுதிக் கொடுத்தனர்.

Related posts

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி