கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில காய்கறிகள் வரத்து குறைந்ததால் திடீர் விலை உயர்வு: பறக்கும்படை சோதனையால் பாதிப்பு என வியாபாரிகள் வேதனை

அண்ணாநகர்: தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையால் வங்கியில் பணம் செலுத்த முடியாத நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநிலத்தில் இருந்து காய்கறிகள் வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவற்றை சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் மற்றும் சிறுவியாபாரிகள் வாங்கி பயனடைகின்றனர்.

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகிறது. தினமும் 700 லாரிகளில் 7,500 டன் காய்கறிகள் வருகிறது. வெளிமாநில வியாபாரிகளுக்கு வங்கி மூலம் பணம் செலுத்தினால் உடனே, காய்கறிகள் லோடு லாரியில் கோயம்பேடு வந்து சேர்ந்துவிடும். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்கின்றனர்.

அதன்படி, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையினர் வியாபாரிகள் வங்கியில் செலுத்த கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்கின்றனர். இதனால் காய்கறி வரத்து குறைந்துள்ளது.
ஒரு கிலோ பீன்ஸ் மற்றும் எலுமிச்சை பழம் ரூ.120, பீட்ரூட், சேப்ப கிழங்கு ரூ.50, காராமணி, பாகற்காய், அவரைக்காய் ரூ.40, உருளைகிழங்கு, சவ்சவ், வெண்டைக்காய், கத்திரிக்காய், புடலாங்காய், வெள்ளரிக்காய், கொத்தவரங்காய் ஆகியவை ரூ.35க்கு விற்கப்படுகிறது. அதேபோல், முள்ளங்கி ரூ.45, முட்டைகோஸ் ரூ.25, காலிபிளவர், நூக்கல், கோவக்காய் ரூ.25க்கும், பீர்க்கங்காய் ரூ.30க்கும், பச்சை மிளகாய் ரூ.60க்கும், பட்டாணி ரூ.100க்கும் விலை உயர்ந்து விற்கப்படுகிறது.

இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், விலை உயர்விற்கு தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒரு காரணம். பறக்கும் படை அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட் அருகே 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். வியாபாரிகளை மடக்கி பணத்தை பறிமுதல் செய்கின்றனர். இதனால் வெளிமாநில காய்கறி வியாபாரிகளுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு மார்க்கெட்டிற்கு காய்கறிவரத்துவெகுவாக குறைந்துவிட்டது. தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகளும், திடீர் விலை உயர்வால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்