லோக்சபா தேர்தலில் போட்டியிட பயந்து ஓடும் கோயம்பேடு கட்சியினரின் மனநிலையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தனித்து போட்டி, மூன்றாவது அணி என்று அறிவித்தால் எஸ்கேப் ஆகும் நிலையில் உள்ள கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்லேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டுல 3வது பெரிய கட்சி நாங்கதான்னு சொல்லிகிட்ட கோயம்பேடு கட்சி. கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்ல சொல்லிக்குற அளவுக்கு வாக்குகளை வாங்கல. வாக்கு வங்கியும் முன்புபோல இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தெரிந்து அதிர்ச்சி அடைந்தது கோயம்பேடு கட்சியின் தலைமை கட்சியில் மாநில செயலாளர், மாவட்ட செயலாளர் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை உள்ள கோயம்பேடு கட்சியினர்தான். அதேபோல, உள்ளாட்சி தேர்தல்ல பல இடங்கள்ல டெபாசிட் கூட கிடைக்கல… உள்ளாட்சி தேர்தல் என்பதால் தோல்வியோட மானமும் போச்சு என்று புலம்புறாங்க. இதனால கோயம்பேடு கட்சி தொண்டருங்க பலரும், தற்போது கட்சி மாறி வேறு கட்சிக்கு போயிட்டிருக்காங்க.

வேறு கட்சியில் செல்வாக்குள்ள நபர்கள் மூலம் கட்சி மாறி, புது கட்சியில் இடம் பிடிக்க பிளான் போட்டு காய் நகர்த்தி கொண்டு இருக்காங்க. பலர் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கட்சி மாறி இப்போது வேறு கட்சியின் அட்டையை வைத்து அரசியல் செய்து வர்றாங்க. இப்போது மிச்சம் சொச்சம் இருக்கும் தொண்டர்களும் நிர்வாகிகளும் ரூம் போட்டு யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்களாம். வர்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாசம் தான் இருக்குது. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருது. சமீபத்துல, மலர் கட்சி நடத்திய கூட்டணி ஆலோசனைக்கு, கோயம்பேடு கட்சிக்கு அழைப்பு இல்லாததால் அக்கட்சியினர் அப்செட் ஆகியிருக்காங்க. அதோட, இலை, தாமரை கட்சிகளோட கூட்டணி இல்லை என்ற பேச்சும் எழுந்திருக்குதாம். வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல, தனியாக நின்னா, செலவு செய்றது கஷ்டம்னு அந்த கட்சியிலயே பேசிக்கிறாங்களாம்.

2011க்கு அப்புறம் நடந்த தேர்தல்ல எம்எல்ஏ, எம்பி பதவிக்கு போட்டியிட்ட ஒருத்தர் கூட ஜெயிக்கவே இல்லையாம். இதனால வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல பெரிய கூட்டணி கரன்சி அள்ளித் தரும் கூட்டணியாக இருந்தாலும், வேட்புமனு வாங்கலாம். இல்லையென்றால் வேறு கட்சிக்கு தாவ வேண்டியதுதான் என்று பேசிக் கொள்கிறார்கள்….’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கேரள எல்லையில் இலை லாரிகள் மூலம் கோடிக்கணக்கில் என்ன போகுது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில் இருந்து, கேரளாவிற்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இலை கட்சியினர் போராட்டம் நடத்தி வர்றாங்க. இலை கட்சி நிர்வாகி ஒருவரே தனது லாரிகளில் கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்தி போகிறாராம். அப்படி அவர் செல்லும்போது எல்லா செக்போஸ்டிலும் சல்யூட் அடித்து வழி அனுப்பி வைக்கிறாங்களாம்.

கோவை மாவட்டத்தில் இருந்து கனிம வளங்களை கடத்தும் இந்த நபரின் லாரிகள், எல்லையில் உள்ள ஆர்டிஓ செக்போஸ்ட், காவல்துறை செக்போஸ்ட் என எந்த சோதனைச்சாவடியிலும் நிற்பதே கிடையாது. இலை கட்சியின் இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர், பார்க்க வேண்டிய அதிகாரிகளை முறைப்படி பார்த்து விடுகிறார். ‘வெயிட்டை’ கணக்கிட முடியாத அளவுக்கு கவனித்து விடுகிறாராம். அதனால், இவரது லாரிகளுக்கு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை யாரும் தடுத்து நிறுத்துவது கிடையாதாம். சமீபத்தில், இந்த நபரின் லாரி, விதிமீறி இயங்கியதாக கேரளா மாநிலம் திருச்சூரில் மாட்டியதாம். அங்குள்ள லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், இந்த டிரைவரை பதம் பார்க்க, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இறுதியில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து நடந்ததாம்.

இதில், கேரள லாரிகள் ஓனர்கள் தரப்பும் இலை கட்சி நிர்வாகியின் தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டதாம். இதனால, இலை கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி எல்லா வகை பிரச்னையில் இருந்தும் தப்பிட்டாங்க. எல்லாம் கரன்சி செய்த வேலையால் கேரள தரப்பு அமைதியாக, காக்கிகள் தரப்பு தங்கள் கஜானாவை நிரப்பி கொண்டார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதுவையில் தாமரையை காலி செய்ய புல்லட் சாமிக்கு துணை நிற்பது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுவையில் புல்லட்சாமி கட்சியுடன் தாமரை கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புல்லட் சாமி கொண்டு வரும் மக்கள் நல திட்டத்தால் அவருக்கு புகழ் கிடைக்கும் என நினைத்தால் உடனே தலைமை செயலர் மூலம் தாமரை அந்த திட்டத்தை முடக்கும்.

உடனே புல்லட் சாமி, தாமரைக்கு எதிராக பேச முடியாது என்பதால் அவரது கட்சியின் தீவிர எம்எல்ஏக்கள் ஏகேடி, கேஎஸ்பி, எல்கே, பாஸ் ஆகிய 4 பேரும், தாமரையை வறுத்தெடுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். உடனே பவுல்புல் பெண்மணி, நடுநிலை நாயகர் ஆகியோர் சமரசம் பேசி கூட்டணி உடையாமல் கொண்டு செல்வது வழக்கமான நாடகமாக உள்ளது. தற்போது அடுத்த மாதம் முதல் வாரத்தில் புல்லட்சாமிக்கு பிறந்த நாள் வருகிறது. அதனை வெகு சிறப்பாக கொண்டாட நால்வர் அணி எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர். அதையொட்டி இம்மாத கடைசி தேதியில் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கி புல்லட் சாமியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்காக அவரது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், சக எம்எல்ஏக்களை நேரிடையாக சென்று ஆலோசனை நடத்தி சிறப்பாக கொண்டாட தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு

பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்: ப.சிதம்பரம்

உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் சோதனை