கோயம்பேடு காவல் நிலையம் அருகே வியாபாரியை தாக்கி வழிப்பறி 3 கல்லூரி மாணவர்கள் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு காவல் நிலையம் அருகே ஐஸ் வியாபாரியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (49). இவர், கோயம்பேடு முனியப்பா நகரில் உள்ள ஐஸ் குடோனில் தங்கி, தினமும் மூன்று சக்கர வாகனத்தில் சென்று ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு கோயம்பேடு காவல் நிலையம் அருகே கருப்பையா வழக்கம்போல் ஐஸ் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 6 கல்லூரி மாணவர்கள், கருப்பையாவை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்த செல்போன் மற்றும் 700 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து கருப்பையா கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில்,போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த வீரசெல்வன் (21), திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (20), மாதவன் (21) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் ஐஸ் வியாபாரியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 3 கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர்.

Related posts

ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி