கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் ஓட்டல்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் ஓட்டல்களால் கூலி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வயிற்று உபாதை ஏற்பட்டு வருவதால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, காய்கறி மற்றும் பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி லாரிகளில் பொருட்கள் வருகின்றன. இவற்றை கடைகளுக்கு கொண்டு செல்லவும், கடைகளில் சிறு வியாபாரிகள் வாங்கும் பொருட்களை வாகனங்களில் ஏற்றுவதற்கும் ஏராளமான கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மார்க்கெட் பகுதியில் உள்ள தள்ளுவண்டி ஓட்டல்களில் சாப்பிட்டு வருகின்றனர். இவர்களை குறிவைத்து மார்க்கெட் பகுதியை சுற்றி 500க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி உணவு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சிக்கன், மட்டன் பிரியாணி, வறுத்த கறி, பொரித்த மீன் என அனைத்துமே திறந்தவெளியில் சமைத்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் சமைத்து, விற்பனை செய்யப்படுவதால், இதை சாப்பிடும் நபர்களுக்கு வயிற்றுப்போக்கு, செரிமான குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னை ஏற்படுகிறது. அவசர தேவை மற்றும் குறைந்த விலையில் கிடக்கிறது என்பதற்காக ஏராளமானோர் வேறுவழியின்றி இந்த தள்ளுவண்டி ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற ேகாரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கூலி தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட் பகுதியை சுற்றி தினமும் காலை, மதியம், இரவு நேரங்களில் தள்ளுவண்டி ஓட்டல்கள் அதிகளவில் செயல்படுகின்றன. முன்பு 300 கடைகள் இருந்த நிலையில், தற்போது 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகிறது. இந்த தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்படும் சிக்கன், மட்டன் சாப்பாடு, பிரியாணி, வறுத்த கறி, மீன், இட்லி, தோசை பூரி மற்றும் போண்டா, பஜ்ஜி, வடை சுத்தம் இல்லாமலும் திறந்த வெளியில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், தரமற்ற எண்ணெய் பயன்படுத்தப்படுவதால், இங்கு உணவு வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்று உபாதை ஏற்படுகிறது. மேலும், மார்க்கெட் அருகே மெட்ரோ பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தள்ளுவண்டி கடைகள் அதிகரித்து வருவதால் இரவு நேரங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகன ஒட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, கூலி தொழிலாளர்கள், பொதுமக்கள் நலன் கருதி இங்குள்ள சாலையோர தள்ளுவண்டி ஓட்டல்களில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு