கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி சட்டை, லுங்கி அணிந்து விஜிலென்ஸ் போலீஸ் ரெய்டு: கழிவறையில் வீசப்பட்ட லஞ்ச பணம் பறிமுதல்

கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கைலி-காக்கி சட்டை அணிந்து ஆட்டோ டிரைவர்கள் போல லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நுழைந்து அதிரடி சோதனை நடத்தியதால பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டர் பால், இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது. அங்கிருந்த ஆவணங்களையும் சரிபார்த்தனர்.

நேற்று இரவு வரை நடந்த இந்த சோதனையின்போது ஆர்டிஓ ஆபீஸ் பணியாளர்கள் மற்றும் புரோக்கர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 910ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அங்கிருந்த கழிவறையில் வீசப்பட்டிருந்த பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப்பாண்டியன் மற்றும் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், லுங்கி மற்றும் காக்கி சட்டை அணிந்து ஆட்டோ டிரைவர்கள் போல் மாறுவேடத்தில் வந்துள்ளனர். இதனால் அவர்களை உடனடியாக அங்கிருந்தவர்களால் அடையாளம் காண முடியவில்லை. சிறிது நேரம் கழித்தே அவர்கள், ரெய்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் என்பது தெரிந்தது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது