கோத்தகிரி அருகே வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை: வீடியோ வைரல்


கோத்தகிரி: கோத்தகிரி அருகே வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்றது. இது தொடர்பான வீடியோ வைரலானது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வாறு உலா வரும் சிறுத்தைகள் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகல் நேரத்தில் கோத்தகிரி அருகே உள்ள பேரகணி பகுதியில் இருந்து கண்ணேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் உலா வந்த சிறுத்தை, நீண்ட நேரம் தேயிலை தோட்டம் பகுதியில் உலா வந்தது. பின்னர் வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாயை வேட்டையாடி வனப்பகுதிக்கு இழுத்து சென்றது.

அப்போது பிக்அப் வாகனத்தில் வந்த தோட்ட தொழிலாளர்கள், தங்களது செல்போனில் நாயை சிறுத்தை வேட்டையாடி சென்ற காட்சியை வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் குடியிருப்பு, தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்