கொருக்குப்பேட்டையில் பல்லி விழுந்த பிரியாணி சாப்பிட்ட சிறுவர்கள் உட்பட 5 பேர் மயக்கம்: கடைக்கு சீல்; மாதிரி சேகரித்து ஆய்வு

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் பல்லி விழுந்த பிரியாணியை சாப்பிட்ட 2 சிறுவர்கள் உட்பட 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு சீல்வைத்த அதிகாரிகள், மாதிரியை ஆய்வுக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரில் உள்ள பிரியாணி கடையில், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவர் பிரியாணி பார்சல் வாங்கியுள்ளார். பின்னர் அந்த பிரியாணியை வீட்டுக்கு கொண்டுசென்று 2 சிறுவர்கள் உள்ளிட்ட தனது குடும்பத்துடன் சாப்பிட்டுள்ளார். அப்போது பிரியாணியில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த பிரியாணியை சாப்பிட்டதில் 2 சிறுவர்கள் மற்றும் ஜெயந்தி (52), சுவாதி (25), சரண்யா (32) ஆகிய 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பெண்கள் 3 பேரும் புறநோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சிறுவர்கள் இருவரும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்த தண்டையார்பேட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராஜபாண்டி, சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், பிரியாணி மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்