கொல்லிமலையில் கடும் வறட்சியால் தாவரவியல் பூங்காவில் காய்ந்த புல் தரைகள்

*சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

சேந்தமங்கலம் : கொல்லிமலையில் போதிய மழை இல்லாததால் கடும் வெயில் காரணமாக தாவரவியல் பூங்காவில் புல் தரைகள் முற்றிலும் காய்ந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தளமாக கொல்லிமலை இருந்து வருகிறது. அடிவாரம் காரவள்ளியில் இருந்து 70 கொண்டை பூசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் குடும்பத்துடன் மலைவாசஸ் தலங்களுக்கு சென்று வருகின்றனர். கொல்லிமலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக கொல்லிமலையில் போதிய மழை இல்லாததால், கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவிகளில் தண்ணீரின்றி வறண்டு விட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாறையை மட்டும் பார்த்து செல்கின்றனர். கடும் வரட்சியின் காரணமாக வாசலூர் பட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் உள்ள அழகு செடிகள், புல் தரைகள் முற்றிலும் காய்ந்து விட்டது.

படகு இல்லம் அருகேயுள்ள சிறுவர், சிறுமியர் விளையாடும் புல் தரைகள் அங்குள்ள மரங்கள் அனைத்துமே வறட்சியின் காரணமாக காய்ந்த நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தாவரவியல் பூங்காவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் செடிகளுக்கு பாய்ச்சுவதற்கு தண்ணீர் இல்லை. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், சமவெளியில் இருப்பது போலவே கொல்லிமலையிலும் வெப்பம் அதிக அளவில் உள்ளது. மழை இல்லாத காரணத்தால், பொழுதுபோக்கு மையங்களில் உள்ள புல்வெளிகள் அனைத்தும் காய்ந்து விட்டது. குழந்தைகள் விளையாடுவதற்கு கூட பசுமை புல்வெளிகள் இல்லை. தாவரவியல் பூங்காவில் உணவருந்தி விட்டு குடிப்பதற்கு கூட தண்ணீர் வசதி இல்லை. அருவிகளிலும் தண்ணீர் இல்லாததால், கொல்லிமலை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது என்றனர்.

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!