கொல்லிமலை கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை துவக்கம்-அரசு நிறுவனங்களுக்கு 6 டன் மிளகு கொள்முதல்

நாமக்கல் : கொல்லிமலை கூட்டுறவு சங்கம் மூலம் ₹33.60 லட்சம் மதிப்புள்ள 6 டன் மிளகு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நேற்று அனுப்பி வைக்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பிரதேசம் கொல்லிமலை. இது கடல் மட்டத்தில் இருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அன்னாசி, கொய்யா, மலைவாழை, போன்றவை விளைகின்றன. கொல்லிமலையில் விளையும் மிளகு, தமிழகம் முழுவதும் சிறப்பு பெற்றது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், கொல்லிமலையில் விளையும் மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இங்கு வசிக்கும் விவசாயிகள் அதிக அளவில் மிளகு சாகுபடி செய்து வருகின்றனர். சுமார் 1200 ஹெக்டேரில் மிளகு பயிரிடப்படுகிறது. இதில் சுமார் 850 மெட்ரிக் டன் மிளகு விளைவிக்கப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மிளகு நேரடி கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து கொல்லிமலை லேம்ப் கூட்டுறவுச் சங்கம் மூலம், சங்க உறுப்பினர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களிடம் இருந்து நேரடியாக மிளகு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் மிளகு, காபி போன்ற வேளாண் விளை பொருட்களை பதனிடுதல் பணி மேற்கொண்டு, அதனை விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு சங்கம் விற்பனை செய்து கொடுத்து வருகிறது. மிளகினை உலர வைத்து, அதை உறுப்பினர்களிடம் நல்ல விலைக்கு கொள்முதல் செய்து, சென்னை மத்திய கூட்டுக் கொள்முதல் கூட்டம் மற்றும் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமும் விற்பனை செய்து வருகிறது.

கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்கத்தின் மூலம், மலைவாழ் மக்களின் வேளாண் உற்பத்தி பொருட்கள் மிளகு, காப்பி போன்றவற்றை நல்ல விலைக்கு கொள்முதல் செய்து பதனிடும் ஆலையின் மூலம் பதப்படுத்தி, அதனை கூட்டுக் கொள்முதல் குழு மூலமும், தமிழ்நாடு மூலிகை பொருள் தயாரிப்பு நிறுவனம் மூலமும், இதுவரை 12 டன் மிளகு கொள்முதல் செய்து ₹54 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து மாதமாதம் விற்பனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கொல்லிமலை லேம்ப் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட மிளகானது, கொல்லிமலை லேம்ப் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம், ₹5.60 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் மிளகு கூட்டுறவு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும், ₹16.80 லட்சம் மதிப்புள்ள 3 டன் மிளகு தமிழ்நாடு மூலிகை பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மற்றும் ₹11.20 லட்சம் மதிப்புள்ள 2 டன் மிளகு கூட்டு கொள்முதல் குழுவிற்கும் என மொத்தம் ₹33.60 லட்சம் மதிப்புள்ள 6 டன் மிளகு நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது. இந்த வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

₹5.60 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் மிளகு, இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து உற்பத்தி நிலையம், கூட்டுறவு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்வது இதுவே முதல் முறையாகும் என அப்போது கலெக்டர் கூறினார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், துணைப்பதிவாளர் கர்ணன், இணைப்பதிவாளரின் நேர்முக உதவியாளர் குண்டன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி