கொள்ளிடம் அருகே வடகால் கிராமத்தில் புதர்மண்டி கிடக்கும் பாசன வாய்க்கால்

*தூர்வார விவசாயிகள் கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே வடகால் கிராமத்தில் புதர் மண்டி கிடக்கும் பாசன வடிகால் வாய்க்காலை தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே வடகால் கிராமத்தில் பிரதான பொறை வாய்க்கால் உள்ளது. இது பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வருகிறது. இந்த வாய்க்காலில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் பிரிந்து சென்று அந்தந்த பகுதிகளில் விளை நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தி வருகிறது. இந்த வாய்க்காலிலிருந்து வடகால் கிராமத்தில் பாசன கிளை வாய்க்கால் பிரிந்து சென்று அப்பகுதியில் உள்ள சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வசதியை அளித்து வருகிறது.

மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் அதிகம் சூழாமல் காத்து எளிதில் வெளியேற்றி செல்லும் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் விடப்பட்டதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சென்று இந்த வாய்க்காலில் கலந்து வருகிறது. நெடுஞ்சாலை ஓரம் இந்த வாய்க்கால் சென்று கொண்டிருப்பதால் சாலை ஓரத்தில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்களும் அப்பகுதியில் வயல்களுக்கு செல்பவர்களும் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர். இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் புதர் மண்டி மூடிக்கிடக்கிறது.

இந்த வாய்க்கால் தூர்வாரி ஆழப்படுத்தாவிட்டால் வரும் பருமழையின்போது அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் தேங்கும் மழை நீர் எளிதில் வெளியேறிச் செல்ல முடியாமல் அங்குள்ள குடியிருப்புகளையும், விளை நிலங்களையும் மழைநீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இப்படி புதர் மண்டி பல இடங்களில் அடைபட்டு கிடப்பதால் வரும் மழைக் காலத்தில் தண்ணீர் எளிதில் சென்று சேர முடியாத நிலை ஏற்படும்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த பாசன மற்றும் வடிகால் வாய்க்கால் மூலம் வடகால் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன மற்றும் வடிகால் வசதியை பெற்று வருகிறது. வடகால், கிழக்குத்தெரு, நடுத்தெரு, அரண்மனை தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது குளங்களுக்கு தண்ணீரை தேக்கி வைக்கவும் இந்த வாய்க்கால் பயன்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பெரிதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதி பாசனத்திற்கு இந்த வாய்க்கால் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதனால் இந்த வாய்க்காலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வரும் பருவ மழை காலத்திற்கு முன்பே தூர்வாரப்படாமல் உள்ள இந்த வடகால் கிராமத்தின் பாசன மற்றும் வடிகால் வாய்க்காலில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்றி தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை