கொல்கத்தாவில் நீட் தகுதி பட்டியலில் இடம்பெற வைக்க ரூ5 லட்சம் வாங்கிய நபர் கைது


கொல்கத்தா: கொல்கத்தாவில் நீட் தேர்வு தகுதி பட்டியலில் இடம்பெற வைப்பதாக கூறி ரூ.5 லட்சம் பணம் வாங்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 2024ம் ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடைபெற்று, இம்மாதம் 4ம் தேதி முடிவுகள் வௌியாகின. 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி இருந்தனர். இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. ஆரம்பத்தில் புகார்களை மறுத்த ஒன்றிய அரசு பின்னர் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டது. தேசிய தேர்வுகள் முகமையின் தலைவர் சுபோத் சிங் நீக்கப்பட்டார். அத்தோடு நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நீட் தேர்வு தகுதி பட்டியலில் இடம்பெற செய்ய பணம் வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கொல்கத்தாவின் ஷேக்ஸ்பியர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், “நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலில் இடம்பெற செய்து கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ஒருவர் ரூ.12 லட்சம் கேட்டார். அவருக்கு முதல் தவணையாக ரூ.5 லட்சம் தந்தோம்” என மாணவி ஒருவரின் தந்தை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் குற்றம்சாட்ப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை