கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு போராட்டம்: ஹவுரா அருகே நூற்றுக்கணக்கானோர் குவிந்து பேரணி

கொல்கத்தா: மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிகேட்டு கொல்கத்தாவில் உள்ள ஹவுராவில் நூற்றுக்கணக்கானோர் வீதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மட்டுமின்றி நாடு முழுவதுமே இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. உச்சநீதிமன்றம், மருத்துவ சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் கொல்கத்தாவில் மாணவர் சங்கம் இன்னும் போராட்டத்தைக் கைவிடவில்லை, நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, தற்போது வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாணவர்கள் சங்கம் மாபெரும் பேரணியை முன்னெடுத்துள்ளது. இதனால் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர் பேரணி இன்று நபன்னா பகுதியை அடைவதால், அங்கு மட்டும் 2,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

மாணவர் சங்க பேரணி இன்று ஹவுரா பாலத்தை அடைந்தது. அங்கு காவல்துறையினர் தடுப்புகளை வைத்திருந்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அந்த தடுப்புகளை கடந்து செல்ல முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் நீடித்து வருவதால் அங்கு பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.

Related posts

தீப்பிடித்து எரிந்த தயாரிப்பாளர் கார் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு நாசம்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

அதிகாரி மிரட்டியதால் அஞ்சலக பெண் ஊழியர் தற்கொலை

பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து 3 பேர் பலி